Saturday, September 13, 2014



சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  

(Social Fibers & Social Bonds)



நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )
எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுவதற்கானக் காரணம் வருமாறு: 

தாய்மொழி, பாரம்பரிய அடிப்படையிலான பண்பாடு போன்றவற்றிற்கு எதிராக,  சமூக அளவில் மேற்கத்திய குறிப்பு ஆயத்திற்கு (Western Paradigm)  அடிமையான‌ , 'முற்போக்கு சக்திகள் ' வளர்ந்து, தமிழ்நாட்டில் செல்வாக்கு செலுத்திய‌தன் விளைவுகளை, ஆழமாக கூர்ந்து கவனித்து, உரிய பாடங்கள் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனது வாழ்வில் நான் பட்ட துயரங்களும், அவமானங்களும் - அவற்றில் சில நானாகவே சமுகத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக  விரும்பி அனுபவித்தவை -  இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய வாழ்க்கைப் பயணமாகவே எனக்கு படுகிறது. இசை இயற்பியல் (Physics of Music) அடிப்படையில்,  பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள்,  மேற்கத்திய குறிப்பாயத்தின் வரை எல்லைகளையும் (Limitations), அவற்றைப் பற்றிய தெளிவின்றி மேற்கொள்ளப்பட்ட முற்போக்கு முயற்சிகளின் பாதகங்களையும் எனக்கு புலப்படுத்தியது. 

மேற்குறிப்பிட்ட பின்னணியில், தமிழ்நாடு தற்போது வளர்ச்சி நோக்கிய திருப்பு முனையில் இருப்பதை உணர்த்தும் 'சிக்னல்கள்' (signals) எனக்கு புலப்பட்டதன் காரணமாக, அந்த போக்கிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவே இந்த முயற்சியிலும் நான் ஈடுபட நேர்ந்தது.

அந்த 'சிக்னல்கள்' வருமாறு:

அரசியல் கட்சிகளிடம் மக்கள் நம்பிக்கையிழந்து, தமது பிரச்சினைகளுக்கு மக்கள், குறிப்பாக பெண்கள் ,  தாமே தெருவில் இறங்கிப் போராடுவது;

பொது இடங்களில் திருடர்களையும், பெண்களிடம் பாலியல் வன்முறை செய்பவர்களையும் பொது மக்களே பிடித்து, உதைத்து, காவல் துறையிடம் ஒப்படைப்பது;

நிறைய மதிப்பெண்கள் எடுத்து, மருத்துவ, பொறியியல் படிப்புகள் படிக்க நிதியின்றி மீடியாக்கள் மூலம் உதவி கேட்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் உதவி;

தனியார் பள்ளிகளை விட அதிக தரமானக் கல்வி வழங்கும் 'மனித தெய்வங்களாகிய' அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர்;

பணம் சம்பாதிப்பதற்காக இழிவான வழிமுறைகளை விரும்பாமல் நல்ல பாரம்பரிய மதிப்பீடுகளுடன் வாழும் நடுத்தர, ஏழை மக்களில் பலரும், பணக்காரர்களில் வெகு சிலரும்;

ஆதாயத் தொண்டர்கள் மூலம் இயங்கி வரும் இன்றைய தமிழ்நாட்டு அரசியலானது,  திருப்பு முனைக்குப் பின் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கான விடைகளைத் தேடுவதும் இந்த முயற்சியில் அடங்கும். 

முதலில் இந்த முயற்சிக்குத் துணை புரிந்து வரும்-  ' ON GROWTH AND FORM BY  D'ARCY WENTWORTH THOMPSON என்ற நூலைப் பற்றிய சிறு அறிமுகம்: 

1917- இல் வெளிவந்து மீண்டும் மறுபதிப்புகளுக்குள்ளான நூல் இதுவாகும். கணிதம், இயற்பியல்(Physics), வேதியல்(Chemistry), உயிரியல்(Biology) உள்ளிட்ட அனைத்து அறிவியல் கோட்பாடுகள் பின்னிப் பிணைந்து இந்நூலில் வலம் வருகின்றன. ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்களில் 17 அத்தியாயங்களில் மேற்கொள்ளப்பட்ட, காலத்தால் அழியாத ஆய்வுத் தேடலாக இந்நூல் அமைந்துள்ளது.

உயிரினத்தைப் பொருளாகவும், செயல்நுட்பம் உடையதாகவும் (as a material and mechanical configuration ) கருதி, அதன் வளர்ச்சி, அது தொடர்புடைய வடிவம், ஆகிய புறத் தோற்றத்துடன்  கணிதம் மற்றும் இயற்பியல் விதிகளுடன் வெளிப்படும் தொடர்பை ஆராய்வதே, இந்நூலின் இலக்காக முன்னுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நூலைப் படிக்கும் போதே, அதில் நான் விளங்கிக் கொண்டவற்றை சமூகத்திற்கும் பொருத்திப் பார்க்கும் நோக்குடன் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.

தமிழில் இது போன்ற உள்ளடக்கம்(content)  புதிதாக இருக்கலாம். எனக்கும் அது எவ்வளவு சவாலாக இருந்திருக்கும் என்பதை  இதைப் படிப்பவர்கள் அறிவார்கள்.

சமூகம் என்பதும் உயிரினம் போன்றே தோற்றம், வளர்ச்சி, சிதைவு. தோற்றம் என்று தொடராக, அந்தந்த கட்டங்களுக்கான வடிவங்களுடன் வாழ்வதாகும். குடும்பம், நண்பர்கள் உள்ளிட்ட சமூக வட்டம், பண்பாடு உள்ளிட்ட பலவகை அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும், சீர்கேடும் உள்ளிட்ட அனைத்துமே சமூகத்தின் 'உயிர்ப் போக்கின்' இயக்கத்தன்மையோடு பின்னிப் பிணைந்துள்ளன.

ஒரு தனி மனிதரின் பிறப்பும், வாழ்வும், இத்தகைய அமைப்புகளில் அவரின் பங்கேற்பும் சமூக  உயிர் இயக்க தொடர்புடைய சமூக இழைகளும்(social fiber) , சமூகப் பிணைப்புகளும் (social bonds)  சமூகம் பெறும் மாற்றங்களுக்கேற்ப மாறுகின்றன. இந்த போக்கிற்கு உடன்படும் மனிதர்கள் இந்த அமைப்பில் அவரவர் 'உடன்படும்' (Consonant) வலிமைக்கேற்ப செல்வாக்கு பெறுவதும், 'உடன்படா' (Dissonant) வலிமைக்கேற்ப செல்வாக்கிழந்து, வெளியேறுவதும்/வெளியேற்றப்படுவதும் நடக்கின்றன.

மேற்குறிப்பிட்ட முறையில் ஒரு மனிதர் சமுக இழைகள் மற்றும் பிணைப்புகள் அடிப்படைகளில் தாம் வாழும் வாழ்வானது, தாம் சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளிட்ட பலவகை சமூக அமைப்புகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது? நமது வாழ்வின் போக்கை எந்த அளவுக்கு நாம் நெறிப்படுத்தி ஆக்கபூர்வமான திசையில் பயணிக்க முடியும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகளைப் பெற துணை புரியும் குறிப்புகள் வருமாறு:

1.குடும்பம், நட்பு, உள்ளிட்டு பலவகை அமைப்புகளில்(structures) அங்கம் (membership) வகிக்கும் மனிதர்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் தொடர்புகள் ஆகியவை சமூக இழைகளாகும்(social fibers).

2. அங்கம் வகிக்கும் மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,

3. தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்ப‌ந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).

4. ஒரு அமைப்பானது, (குடும்பம், நிறுவனம், அரசு, etc ), அதன் நோக்கங்களை நிறைவேற்ற,  தரஏணி  நிலையிலான ( hierarchical status) செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.அதன் காரணமாக அச்செயல்பாடுகளுக்கு பொறுப்பான மனிதர்களின் நிலையும்  தரஏணி நிலையில் மேலும் கீழுமாக‌ இருக்கும்.

5.  சமூகத்தில் உள்ள அமைப்பில் உள்ள ஒரு மனிதரின் தரஏணி நிலையைப்( hierarchical status)  பொறுத்து, அவரின் தொகுஆற்றல் ( resultant energy)  என்பது,  அவரது தனி ஆற்றல் மதிப்பிலிருந்து அவர் தொடர்பில் உள்ள அமைப்பிற்கு அவர் வழங்கும் ஆற்றலின் மதிப்பைக் கழித்து வருவதாகும். அல்லது அவரது தனி ஆற்றல் மதிப்பிலிருந்து அவர் தொடர்பில் உள்ள அமைப்பிலிருந்து  அவர் பெரும் ஆற்றலின் மதிப்பைக் கூட்டி வருவதாகும். எவ்வளவு கழிப்பது அல்லது கூட்டுவது என்பது அந்த அமைப்பின் தரஏணி  நிலையில் அவருக்கான நிலையைப் பொறுத்ததாகும். அதைக் கீழ்வரும் சமன்பாட்டின் மூலம் குறிக்கலாம்.

சமூகத்தில் உள்ள அமைப்பில் உள்ள ஒரு மனிதரின் தரஏணி நிலையைப்( hierarchical status)  பொறுத்து, 

அவரின் தொகுஆற்றல் ( resultant energy)  = அவரின் தனி ஆற்றல் (individual energy)  + X%‍ சமூக அமைப்பாற்றல் ஆகும்((socio-structural energy) ) . 
X-இன் மதிப்பு நேர்( + ‘ கூட்டுவது’ ) அல்லது எதிராக ( - ‘கழிப்பது’) இருக்கலாம் - அந்த நபரின் தர ஏணி நிலையைப் பொறுத்து.

 6. தர ஏணி நிலையில் தமது ஆற்றலை அமைப்பு செயல்பாட்டிற்கு வழங்காத(‘கழிப்பது’ இல்லாத‌)  நிலையும், அமைப்பு செயல்பட்டில் தனது தர ஏணி நிலைக்கான செயலைஆற்ற, பிற மனிதர்களின் ஆற்றல்களை அமைப்பின் மூலமாக பெறாத (‘ கூட்டுவது’ இல்லாத‌  ) நிலையும், தனது ஆற்றலில் இழப்போ, ஏற்போ இல்லாத சுழி(zero) நிலையாகும். தர ஏணி நிலையில் நடுவில் சுழி நிலை மதிப்புக்கு கீழுள்ளவர்கள் எதிர் மதிப்பையும் (தமது ஆற்றலை அமைப்புக்கு வழங்கும் ‘கழிப்பது’), மேலுள்ளவர்கள் நேர் மதிப்பையும் (அமைப்பின் மூலமாக பிறர் ஆற்றலை தாம் பெற்றுக் கொள்ளும் ‘ கூட்டுவது’  )  கொண்டிருப்பர். சுழி தர ஏணி நிலை மதிப்பிலிருந்து எவ்வளவு கழிப்பது அல்லது கூட்டுவது என்பது,  அந்த நபரின் தர ஏணி நிலை மதிப்பு தொலைவு ( distance from the zero state in the hierarchy )  என்பதைப் பொறுத்ததாகும்.

7.  சமூக அமைப்பாற்றலும்(socio-structural energy), தனிநபரின் தொகு ஆற்றலும்(Resultant Energy),  நிலை ஆற்றலாகவும்(Potential Energy) ,  இயக்க ஆற்றலாகவும் (Kinetic Energy) பிரிந்திருக்கும்.  விரும்பினால் செலவழிக்கக் கூடிய நிலையில் உள்ள‌ , மூளை உழைப்பு + உடலுழைப்பு + அமைப்பு/அவர் வசம் உள்ள பொருள் ஆகியவை நிலை ஆற்றலாகும். அவை செயல்பாடுகள் மூலம் செலவுக்கு உள்ளாகும்போது இயக்க ஆற்றலாக மாறுகின்றன.

8. மனிதர்கள் ஆற்றல்களில்(Energy) வெளிப்படும் விசைகள்(Forces) ஆனவை, வெவ்வெறு வகையிலான சமூக இழைகளின் தோற்றங்கள் மற்றும் வள‌ர்ச்சிகளின் ஊடே செயல்பட்டு, பலவகைப்பட்ட சமூகப் பிணைப்புகள்(Social Bonds)  மூலம் அந்த மனிதர்கள் சம்பந்தப்பட்ட வெவ்வேறு அமைப்புகளை (குடும்பம், நிறுவனம், அரசு, etc ) உருவாக்குகின்றன. 

9. குறிப்பிட்ட சமூக அமைப்பின் செயல்பாட்டின் போது ( உதாரணம்: குடும்பத்தில் உள்ளவர் திருமணம் செய்யும் போது, பொதுக் குடும்பத்திற்காக செலவுகள் செய்யும்போது ) வெளிப்படுவதும், தனி நபரின் செயல்பாட்டின் போது (தனி நபர் தமக்கான செலவுகள் செய்யும்போது, கேளிக்கைகளில் ஈடுபடும் போது) வெளிப்படுவதும் இயக்க ஆற்றலாகும். நிலை ஆற்றல் மதிப்பு சுழியாகவோ, எதிர்க்குறியிலோ( - )  இருக்கும் போது, இயக்க ஆற்றல் செயல்பாடு காரணமாக, கடன் வாங்கும் போது, நிலை ஆற்றல் எதிர்க்குறி மதிப்பில் (தனி நபரின்/அமைப்பின் கடன்களும் மற்றும் மூளை உழைப்பு, உடலுழைப்பு அகியவற்றைக் குறைக்கும் குறைபாடுகளும், நோய்களும், இயற்கை வளங்கள் அழிவும்) அதிகரிக்கும். 

கடன்கள் காரணமாக சமூகத்தில் கொலைகளும், தற்கொலைகளும் அதிகரிப்பதும், மனிதர்கள் கூடுதலாக பல வகை நோய்களுக்கு உள்ளாவதும், மூளை உழைப்பிலும், உடல் உழைப்பிலும் திறமைக் குறைவுகள் அதிகரிப்பதும், அதன்காரணமாக வெளியிலிருந்து உடல் உழைப்பு, மூளை உழைப்பு திறமைசாலிகள் உள்ளே வருவது அதிகரிப்பதும், அதன் தொடர்விளைவாக அசையாச் சொத்துக்கள் வெளியார்வசம் ஆவது அதிகரிப்பதும், இயற்கை வளங்கள் அழிவு அதிகரிப்பதும் , ஒரு சமூகத்தின் நிலை ஆற்றலின் எதிர்க்குறி அபாயகரமான அளவில் அதிகரிப்பதன் வெளிப்பாடுகளாகும். 

10. தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும். 

11. சட்டம் என்பது அரசு என்ற அமைப்புடன் தொடர்புடையது. பாரம்பரியம், பண்பாடு ஆகியவை அடிப்படையிலான நெறிமுறைகள் சமூகம் என்ற அமைப்புடன் தொடர்புடையது. சட்டத்திற்குப் பயந்து ஒரு மனிதர் தவறு செய்வதற்கும், சமூக நெறிமுறைகளுக்குப் பயந்து, ஒரு மனிதர் தவறு செய்வதற்கும், இடையே வேறுபாடுகள் உண்டு. ஒரு தனி மனிதரை தவறு செய்யாமல் கட்டுப்படுத்துவதில் சட்டத்தை விட,  சமூக நெறிமுறைகளே வலிமையானவை.

சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமுகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, போன்றவை அதிகரிப்பதும், சுமார் 11 வயதிலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் போக்குகள் அதிகரிப்பதும், சமூக நெறிமுறைகளின் சீரழிவின் வெளிப்பாடுகள் ஆகும். அதிலும் சட்டத்தை ஏமாற்றி, (பணம் ஈட்ட நாய்களாகவும், புலமை, நேர்மை, மதிக்க தெரியாத கழுதைகளாகவும், 'வாழ்வியல் புத்திசாலிகளாக') குறுக்கு வழிகளில் செல்வம் செல்வாக்கு சம்பாதிப்பவர்களை 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது,  சமூகத்தின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும். அது தமிழ்நாட்டில் வாழும்  தமிழர்களுக்கு இடையில் உள்ள, தொடர்புகளாகிய‌, சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.

12. சமூக இழைகள் 'கள்வர்' பண்பு மாற்றத்திற்குள்ளாகும் போது, அந்த இழைகள் தொடர்புள்ள மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகளும்', ஈடுபாடுகளும்' கள்வர் பண்பு மாற்றத்திற்குள்ளாவதைத் தடுக்க முடியாது. சீரழிவைச் சந்தித்துள்ள சமூகத்தில் உள்ள அமைப்புகளின் சமூக இழைகளும், சமூகப் பிணைப்புகளும்,  சீரழிவுக்கான பண்பு மாற்றங்களுக்கு உள்ளாவதும் சிரழிவின் இயல்பே ஆகும்.

13. அப்படிப்பட்ட சமூகத்தில்  'மனிதராக வாழும், வாழ விரும்பும்' ஒருவர், தாம் சார்ந்துள்ள, குடும்பம், நட்பு, கொள்கை, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ள ஒவ்வொருவருடனும் தமக்குள்ள தொடர்பு செயல்பாட்டின் அடிப்படையை - சமுக இழையின் பண்பை-  தொடர் ஆய்வுக்கு உட்படுத்தி வாழ்ந்தால் தான், சீரழிவுப் போக்கில் சிக்காமல் வாழ முடியும். தமது ஆற்றல் நேரடியாகவோ, தாம் சார்ந்துள்ள அமைப்பின் (குடும்பம், கட்சி, etc )  மூலமாக மறைமுகமாகவோ,  சமூக சீரழிவிற்குப் பயன்படுவதைத் தவிர்க்க முடியும்.

14. தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா? இல்லையா? அந்த பயணத்தில் நாம் கள்வராக பயணிக்கிறோமா? அல்லது நம்மையறியாமலேயே கள்வராக மாறிவரும் திசையில் பயணிக்கிறோமா? அல்லது மனிதராக பயணிக்கிறோமா?

-       என்ற கேள்விகளை நமது மனசாட்சிக்குட்பட்டு, நாம் தான் எழுப்பி, விடைகளைத் தேடி, நமது வாழ்க்கைப் பயணத்தை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். நாமோ, நமது தொடர்புகளாகிய சமூக இழைகளோ 'கள்வர்' நோயில் சிக்கியுள்ளதா? இல்லையா? என்பது பற்றி கவலைப் படாமல், தமிழ் மொழியின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவைப் பற்றி, கவலைப்பட நமக்கு அருகதை இருக்க முடியுமா?

சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம்  மனிதரின் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன என்பது இந்நூலைப் படிக்கையில் எனக்கு தெளிவானது. 'முற்போக்கு', 'புரட்சி' என்று உணர்வுமயமாக அவற்றை சிதைத்தால், சமூகம் எவ்வளவு ஆபத்தான அழிவுப் பாதையில் பயணிக்கும் என்பதும் எனக்கு தெளிவானது. அந்த அழிவுப்பாதைப் பயணத்தின் போக்கில், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், 'அதிவேகப் பணக்காரர்' வளர்ச்சியும்  விளைந்துள்ளன. இத்தகைய 'முற்போக்கு', 'புரட்சி' முயற்சிகளால் சமூக இழைகளிலும், பிணைப்புகளிலும் ஏற்பட்ட பண்பு மாற்றங்களால் குடும்பம், நட்பு உள்ளிட்டு 'அன்பின்' அடிப்படையில் இருந்த மனித உறவுகளெல்லாம் 'பணத்திற்கு' அடிமையான செல்வாக்கில், தமிழ்நாடு சிக்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'அதி வேக' பணக்காரக் குடும்பங்களின் 'பல்வேறு' மட்டங்களில் 'ஏதாவது ஒரு வகையில்' தொடர்பு இல்லாமல் உயர் நடுத்தர, பணக்காரக் குடும்பங்கள் தமிழ்நாட்டில் வாழ்வது கடினமே. இத்தகைய தொடர்பின்றி, ஓரளவு பாரம்பரிய மதிப்பீடுகளுடனும், லாப நட்ட நோக்கமில்லாத அன்புடனும் வாழ்பவர்கள் நடுத்தர, ஏழை மட்டங்களில் வாழ்வதற்கான  சாத்தியமே தமிழ்நாட்டில் இருக்கிறது. 

உயர் நடுத்தர மட்டங்களில் உள்ளவர்கள் 'மேலும் பணம் சம்பாதிப்பதிலோ', மேலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்குவதிலோ ஆர்வம் இல்லையென்றால், தவிர்க்க இயலாமல் வரும் இழப்புகளை ஏற்று வருத்தமின்றி வாழ்ந்தால், மேற்குறிப்பிட்ட 'அதி வேக' பணக்காரக் குடும்பங்களின் தொடர்புகளின் 'தயவின்றி' வாழலாம்.

பாரம்பரியம் பற்றி ஆய்ந்து, இன்றைய சூழலுக்கு ஏற்றவற்றை அடையாளம் கண்டு, அகவயப் படுத்தி, லாபநட்ட நோக்கமின்றி உண்மையான அன்புடன் வாழ்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஊக்குவித்து வாழ்தல் என்பது ஒரு ஆக்கபூர்வமான சமூகப் பொறியியல் வினையூக்கியாக(Social engineering catalyst)  இருக்குமா என்பதையும் எனது வாழ்வின் ஊடே ஆராய்ந்தும் வருகிறேன்.

No comments:

Post a Comment