Thursday, September 18, 2014


தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?


மார்க்சியம், பெரியாரியம், தலித், இந்துத்வா, இஸ்லாம் போன்ற பல கொள்கைகளையும், தத்துவங்களையும் ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் தமது பிழைப்புக்கு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதை தமது வாழ்வின் முதன்மை நோக்கமாய்க் கொண்டு வாழ்பவர்களும் உள்ளார்கள்.

அவ்வாறின்றி தனிமனித அளவில் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு இருக்கிறது. எனவே கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, உணர்ச்சிபூர்வமற்ற அறிவுபூர்வமான விவாதங்களை ஊக்குவித்து, அத்தகையோர் ஒன்று சேர்ந்தால் மட்டுமே, தமிழ், தமிழர், தமிழ்நாடு தமது வீழ்ச்சிப் பயணத்திலிருந்து தப்பித்து முன்னேற முடியும் என்ற வகையில் நான் எனது செயல்பாடுகளை நெறிப்படுத்தி வருகிறேன்.

அந்த வகையில் நான் மதிக்கும் பெரியார் கொள்கையாளரான திரு. பி.இரெ.அரசெழிலன் ( ஆசிரியர்: நாளைவிடியும் இருதிங்களிதழ் http://www.naalaividiyum.blogspot.in/   )    அவர்களிடமிருந்து பெரியார் பிறந்த தினப் பதிவாக கீழ்வருவதை மின்னஞ்சல் மூலம் பார்க்க நேரிட்டது.

*அர்ச்சகன் பொறுக்கித்தின்ன ஆண்டவன்

அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்

அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்*

-- பெரியார்

தோழர் பெரியார் பிறந்த நாளில்  (செபுதம்பர் - 17)

அவர் பணி முடிக்க உறுதியேற்போம். “

மேலே உள்ளதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியதை,  அவருக்கு பதிலாக அனுப்பினேன், அது ஒரு விவாதத்தைத் தூண்டும் என்ற எதிர்பார்ப்போடு. அது வருமாறு:

*அர்ச்சகன் பொறுக்கித்தின்ன ஆண்டவன்" என்று பெரியார் சொன்னார். ஆனால் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களை விட அதிகம் பொறுக்கித் தின்றது யார்? அவர்கள் உருவானதற்கு யார் காரணம்?

"அதிகாரி பொறுக்கித்தின்ன அரசாங்கம்"என்று பெரியார் சொன்னார்.ஆனால் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக  அதிகாரிகளை  விட ஆட்சியில் இருந்து அதிகம் பொறுக்கித் தின்றது யார்? அவர்கள் உருவானதற்கு யார் காரணம்?

"அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்" என்று பெரியார் சொன்னார்.ஆனால் 1967 இல் பெரியார் 'ஆசிர்வாதத்துடன்' ஆட்சியில் அமர்ந்தவர்கள் 1967‍க்கு முன் இருந்தவர்களை விட அரசியலில் அதிகம் பொறுக்கித் தின்றது பொய்யா? திராவிடர் கழகம் முதல் திருச்சி பெரியார் மையம் வரை பெரியார் இயக்கங்களில் இருந்த சிலர் அதில் 'வாலாக' ஒட்டி பங்கு பெற்றதும் பொய்யா?

திறந்த மனதுடனும் அறிவு நேர்மையுடன் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடைகள் கண்டு, எங்கு எப்படி தவறுகள் நட்ந்தது என்று கண்டுபிடித்து தமது பயணத்தை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டாமா? இல்லையென்றால் நிகழ்கால சமூகத் தொடர்பற்று பெரியார் வாக்கியங்களை நினைவூட்டிக் கொள்வதால் என்ன பயன் விளையும்?

அதன்பின் மேலேக் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கத் துணை புரியக் கூடிய‌ , இந்த தளத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள‌ பதிவினை - சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds) http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html  -  நினைவு கூர்ந்தேன்.

மேற்குறிப்பிட்ட பதிவானது ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து எழுதியதாகும்.  (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )

அதில் உள்ள கீழ்வரும் பகுதி கவனிக்கத் தக்கதாகும்.

“தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.” 
 

பெரியார் போர்வையில் உள்ள தவறான நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்காமல், ஏமாந்து, ஒருவர் தமது சமூக வட்டத்தில் அனுமதித்தால் மிக‌ மோசமான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். அவ்வாறு ஏமாந்து நான் அனுபவித்த அளவுக்கு, எனக்குத் தெரிந்து வேறு யாரும் அவ்வளவு மோசமான விளைவுகளை அனுபவித்ததில்லை. சராசரியாக வாழும் மக்களின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல், ஆதாயத் தொண்டர்களின் அடிப்படையிலேயே, பெரியார் இயக்கங்கள் செயல்படுவது உண்மையா? இல்லையா? உண்மை என்றால், 'பெரியார் போதையில்' சராசரி மனிதரைவிட முட்டாளாக,என்னைப் போன்றவர்கள் வாழ்ந்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல் சுயமாக முன்னேறக்கூடிய அறிவாற்றலோ, தொழில் வியாபாரத் திறமைகளோ இல்லாமல், உட‌லுழைப்பைத் தவிர்த்து 'முன்னேற' தமக்கு இயல்பாக அமைந்த 'தரகுத் தொண்டு புலமையின்' மூலம் 'அதிவேகப் பணக்காரர்கள்' உருவாகவே, பெரியாரும், பெரியார் போதையில் 'முட்டாளாக' வாழ்ந்த என்னைப் போன்றோரும் உழைத்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

பெரியார் கொள்கையை ஏற்று, அதை தமது பிழைப்பாகக் கொள்ளாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்களை எச்சரிக்கவே இந்த பதிவு; அது மட்டுமல்ல, மேலேக் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளை சமூகப் பொறுப்புடனும் அக்கறையுடனும் திறந்த மனதுடன் அறிவு நேர்மையாகத் தேடுவதில் கவனம் செலுத்த வலியுறுத்தவும் இந்த பதிவு;  அதில் தவறினால், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்பவர்களின் ஆற்றல்களும் சமூக சீரழிவிற்கே வழி வகுக்கும். அதைத் தவிர்க்க மேலேக் குறிப்பிட்ட பதிவில் உள்ள கீழ் வரும் பகுதி துணை புரியும்.

“சமூகத்தில் வாழும்  மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளாகிய‌ சமூக இழைகள் எதிர்த் திசையில் இருப்பது  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும். தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா? இல்லையா? அந்த பயணத்தில் நாம் கள்வராக பயணிக்கிறோமா? அல்லது நம்மையறியாமலேயே கள்வராக மாறிவரும் திசையில் பயணிக்கிறோமா? அல்லது மனிதராக பயணிக்கிறோமா?

-       என்ற கேள்விகளை நமது மனசாட்சிக்குட்பட்டு, நாம் தான் எழுப்பி, விடைகளைத் தேடி, நமது வாழ்க்கைப் பயணத்தை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். நாமோ, நமது தொடர்புகளாகிய சமூக இழைகளோ 'கள்வர்' நோயில் சிக்கியுள்ளதா? இல்லையா? என்பது பற்றி கவலைப் படாமல், தமிழ் மொழியின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவைப் பற்றி, கவலைப்பட நமக்கு அருகதை இருக்க முடியுமா?”









 



No comments:

Post a Comment