Friday, July 21, 2017

'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்:

கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? (1)


தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF   ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html   )

அவ்வாறு அரங்கேறிவரும் போக்கில், அந்த திரைக்கதைக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில், நடிகர் கமலஹாசன் உள் நுழைந்திருக்கிறார்.

அதில் அவரின் பாத்திரமானது நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? என்பதை தெளிவுபடுத்தும் சம்பவங்கள் அடுத்து அரங்கேற உள்ளன?


அதில் கமலஹாசனின் கீழ்வரும் கவிதையும் இடம் பெற வாய்ப்புண்டு.


மேலே குறிப்பிட்ட கவிதை தொடர்பாக;
எச்.ராஜாவின் கீழ்வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாகும்.
‘செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, முதல்வராக கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றார்.
ஆனால் கமல் முதல்வராக தகுதி உள்ளதா? ஏனெனில் விஸ்வரூபம் படம் வெளியிடும்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு பயந்து நடுங்கி அழுதார், நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார்.
இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல்வரானால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அதை சமாளிக்க முடியாமல் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன? கமல் ஒரு முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.’ ( http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-hits-hard-on-kamal-haasan/articlecontent-pf253113-290060.html )
கமலஹாசனுக்கு ஆதரவு என்ற பெயரில், எச்.ராஜாவை உணர்ச்சிபூர்வமாக கண்டித்தவர்களில், எவராவது, மேலே குறிப்பிட்ட கருத்தினை, அறிவுபூர்வமாக மறுத்திருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும். 'எச். ராசாக்களுக்கு வயிற்றுப் போக்கை', கமலஹாசன் ஏற்படுத்தியுள்ளதாக 'கண்டுபிடித்து', சசிகலா அரசியல் கும்பலுடன் சேர்ந்து பயணித்த நபர்களை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களுடன் 'கூடி பேசி, கூட்டாக இயங்க முயற்சிக்கலாம்' என்று சுப. உதயகுமாரன் என்பவர் ஆலோசனை கூறும் நகைச்சுவை காட்சியும் அரங்கேறி வருகிறது. (http://tamil.oneindia.com/news/tamilnadu/sp-udayakumaran-comments-on-actor-kamal-hassan/articlecontent-pf253523-290360.html )

கமல்ஹாசன் இனி விரும்பினாலும், பின் வாங்க முடியாத திசையில் பயணிக்க தொடங்கி விட்டாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தி எழுப்பியுள்ளது.
‘கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் பேச ஆரம்பித்தார். தமிழக அரசுக்கு எதிராக பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் கமல். அரசின் அமைச்சர்கள் கமலுக்கு எதிராக களமிறங்கி, ஆதாரம் காட்டுங்க என்று கேட்டதும், கமல் எந்த ஆதாரமும் தரவில்லை. மாறாக ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அடுத்து இன்று நீட் தேர்வின் கொடுமை, டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியாதது என பிரச்சினைகளைக் கையிலெடுத்து, இந்தப் பிரச்சினகளைத் தீர்க்க முடியாத தமிழக அரசு விலகிக் கொள்ளட்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து கமல் பேசப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ‘

தமிழக அரசின் ஊழல் தொடர்பான‌  ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று கமலஹாசன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தபின்;
யார்? யார்? என்னென்ன ஆதாரங்களை, எந்த வழிகளில் சேகரித்து அனுப்பினார்கள்? அவை தொடர்பாக, அடுத்து என்ன மேல் நடவடிக்கைகளுக்கு கமலஹாசன் திட்டமிட்டுள்ளார்? அவற்றை தொகுத்து எம்.ஜி.ஆரை போல, ஆளுநரை சந்தித்து புகார் பட்டியலை ஆதாரங்களுடன் கொடுத்து, சர்க்காரியா கமிசன் அமைக்கும் நெருக்கடியை எம்.ஜி.ஆர் உருவாக்கியது போல, தொடர்ந்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறாரா? அல்லது சிவாஜியைப் போல தேர்தலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு, அசிங்கப்படப் போகிறாரா?
என்பதை, அடுத்து அரங்கேற உள்ள காட்சிகள் தெளிவு படுத்தும்.
இன்று கமலஹாசன் பேசும் வசனங்களை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, ஏன் பேசவில்லை? கீழ்வரும் கேள்விகளை ஏன் கேட்கவில்லை? என்று கமலஹாசன் மீது, நான் குற்றம் சுமத்தப் போவதில்லை.
1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;
கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:
'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;
மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;
அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?
மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா?
மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு, கமலஹாசன் மட்டுமல்ல;
நான் உள்ளிட்டு தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும், தத்தம் மனசாட்சிக்குட்பட்டு,விடைகள் கண்டு, நேர்மையாக பயணிக்க துணை புரியும் கேள்விகள் அவையாகும்.
‘பாரதி வழியில் (‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை’) வாழ்வதை விட, திருக்குறள்('அஞ்சுவது அஞ்சாமை பேதமை' ;428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொண்டு யார் வாழ்ந்தாலும், அது பாராட்டுதலுக்குரியதே ஆகும். …..‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;
ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம். 
ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes )
பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்; ‘ (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_12.html )
கமலஹாசனாயிருந்தாலும், ரஜினியாயிருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நோக்கி பயணிப்பவர்கள் எல்லாம்;
அடிமட்டத்தில் தமிழ்நாட்டின் நிலையை விளங்கி, திட்டமிட, கீழ்வருவது துணை புரியலாம். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னும், சட்டமன்றத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இயலாத அளவுக்கு, உடல்நலக் குறைவில், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியும் சிக்கி உள்ள நிலையில்: 
கீழே குறிப்பிட்டுள்ள, அந்த இரண்டு கட்சிகளின் வலைப்பின்னல்கள் எல்லாம், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும்' பேராசையில், ஆட்டம் கண்டு வரும் போக்கில்; 
எனது அறிவு, அனுபவம் அடிப்படையில், எந்த முறையில் தமிழ்நாட்டு அரசியலில் தலை எடுத்து, ஆட்சியை பிடிக்க முடியும்? என்று கீழே உள்ள பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
‘அண்மையில் வெளிவந்து, அபார வெற்றி பெற்றுள்ள, 'பாபநாசம்' திரைப்படம் உணர்த்தும், சிற்றினம் தொடர்பான, 'சிக்னல்' வருமாறு.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை 'ஆபாசமாக' படம் எடுத்து, மிரட்டி, தனது காமத்துக்கு, தீனீயாக்க முயற்சிக்கிறான், போலீஸ் ஐ.ஜி.யின் மகன்.அத்திட்டத்தை அக்குடும்பம் எவ்வாறு முறியடித்தது? என்பதை, அற்புதமாக வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் அது. நடைமுறையில் அச்சிக்கலை சந்திக்கும் குடும்பங்களில், எத்தனைக் குடும்பங்களின் பெற்றோர்கள், தமது மகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டி, தமது செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வார்கள்? அது போன்ற போக்கில் வாழும் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) தான், தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களின் சமூக முதுகெலும்பா? தமிழ்நாட்டில் அந்த போக்கானது, 'அபரீதமாக' அதிகரித்து வருவதே, அதற்கு எதிர்நீச்சல் போட்ட 'பாபநாசம்' வெற்றி பெற காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944இல் முளைவிட்ட அடையாளச் சிதைவின் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை, மனசாட்சியின்றி, 'பணம், செல்வாக்கு, சம்பாதிக்க', திராவிட மனநோயாளித்தன போக்கில், 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' காவு கொடுக்கும் 'சிற்றினம்' ஆனது, இன்று தமிழ்நாட்டில் உச்சக்கட்ட செல்வாக்குடன் உள்ளதா? உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ விரும்பும்  சாதாரண தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை, அந்த சிற்றின மனிதர்களின் சுயநலத்திற்காக, அரசும், சட்டமும் இழக்கும் அளவுக்கு சீர் குலைத்துள்ளார்களா? ‘  (http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none_9.html )
‘1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. 
பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற முடியாது…….. ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.’(http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html

No comments:

Post a Comment