Wednesday, March 1, 2017

சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' (porki) 'சிக்னல்';
ஈ.வெ.ரா, ராஜாஜி தோற்ற 'இடத்தில்', சு.சுவாமி ஜெயிப்பாரா?


இன்று ‘சசிகலா பினாமி ஆட்சி’ அரங்கேற, சுப்பிரமணிய சுவாமி துணை புரிந்து வருவதற்கும்;

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கவும், 1969-இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகவும்,  ராஜாஜி துணை புரிந்தததற்கும் இடையில் உள்ள ஒற்றுமை,வேற்றுமைகளே;

ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜியும் தோற்ற 'இடத்தில்', சுப்பிரமணிய‌சுவாமி ஜெயிப்பாரா? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

ஈ.வெ.ரா அவர்கள் தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் இழிவாக நிறைய பேசி இருக்கிறார்; எழுதி இருக்கிறார். அவரின் 'சமூக நீதி' ஆதரவு போக்கின் காரணமாக அவற்றை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; அவை எல்லாம் 'திராவிட பொதுவாழ்வு வியாபாரத்திற்கு' எவ்வாறு 'வினை ஊக்கி’யாக (Catalyst) செயல்படும்? என்ற புரிதலின்றி.

தனது மனதுக்கு சரி என்று பட்டதை, துணிச்சலுடன் ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்தியது போல, ராஜாஜி வெளிப்படுத்தியதில்லை. அவரின் உயர்ந்த படிப்பும், புலமையும், அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆனால் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய அதே துணிச்சலுடன், சுப்பிரமணிய சுவாமி தமிழ்நாட்டில் 'பொர்க்கி' (porki)  தமிழர்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்; சுப்பிரமணியசுவாமியின் உயர்ந்த படிப்பும் புலமையும் அதற்கு தடையாக இல்லை.

அவர் மீது 'உணர்ச்சிபூர்வ' கோபத்தை வெளிப்படுத்திய எவரும், அவர் 'பொர்க்கி' என்பதற்கு கொடுத்த, கீழ்வரும் அறிவுபூர்வ வரையறைக்கு, அறிவுபூர்வமாக பதில் சொல்லியதாக தெரியவில்லை.

‘'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய ''பொர்க்கி' (porki) என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation )  என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் ''பொர்க்கி' (porki) தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், ''பொர்க்கி' (porki) விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும்.  'பெரியார்' ஈ.வெ.ரா வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில்,  'உண‌ர்ச்சிபூர்வமாக'  இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய‌  அந்த‌  இரண்டு பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள், என்பதும் என் கருத்தாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

ஈ.வெ.ரா அவர்கள் பிராமணரை எதிர்த்து, 'பொர்க்கியை' விட மோசமான 'சுடு சொற்களால்' ஏசியிருக்கிறார். அதற்காக ஈ.வெ.ரா மீது கோபப்படும் பிராமணர்களுக்கு, கீழ்வரும் தகவல்க‌ள், நம்ப முடியாததாக இருக்கலாம்.

இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்தனர். ஈ.வெ.ரா சென்னை லட்சுமிபுரத்தில் பிராமணர் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். ஈ.வெ.ரா உடல்நலக்குறைவு தொடர்பான சிகிச்சைக்கு பிராமண மருத்துவர்களையும், தனது காரை பழுது பார்க்க, பிராமண டி.வி.எஸ் நிறுவனத்தையுமே அணுகினார். தமது பிராமண நண்பர்களின் தோட்டங்களிலேயே, தமது கட்சியின் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார். பெரியாரும் ராஜாஜியும்; "இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்." என்று பெரியார் தெரிவித்த கருத்து எதை உணர்த்துகிறது? (‘எனது நண்பர் ராஜாஜி ‘:- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசுஇதழில் எழுதியதிலிருந்துதொகுப்பு: சு. ஒளிச்செங்கோ, http://tamil.thehindu.com/opinion/columns/)

பெரியாரும் ராஜாஜியும் நட்பாக இருந்தது போல,தமிழ்நாட்டில் ஆங்காங்கே உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், நேர்மையாகவும் மிகுந்த ஆச்சாரங்களுடன் வாழ்ந்த பிராமணர்கள், நண்பர்களாயிருந்தார்கள். நான் 'பெரியார்' இயக்கத்தில் தீவிரமாக பங்காற்றிய காலத்திலும், எனக்கு நெருக்கமான பிராமண நண்பர்கள் இருந்தார்கள். நான் தினமும் கல்லூரிக்கு எடுத்து வந்த 'விடுதலை' தி.க இதழையும் படித்தார்கள். ஒரு பிராமணப் பெண்ணை மணந்து, அசைவ உணவைத் தவிர்த்து,உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டரையும் நான் சந்தித்திருக்கிறேன்.

பிராமணர்களை ஏசியதை விட‌ மோசமாக, 1949 முதல் 1967 வரை தி.மு.க தலைவர்களையும் ஏசியிருக்கிறார்.

ஆனால் 1967இல் முதல்வரான அண்ணா, தனது அமைச்சரவையை ஈ.வெ.ராவிற்கு காணிக்கையாக்கினார்.

ஈ.வெ.ராவின் கோபத்திற்கு காரணமான 'பிராமணர்களும்' இருந்திருக்கிறார்கள், என்பதானது, ஈ.வெ.ராவிற்கு நெருக்கமான பிராமணர்களுக்கும் தெரியும். 1949 முதல் 1967 வரை தி.மு.க மீது ஈ.வெ.ராவின் கோபத்தின் நியாயமானது அண்ணாவிற்கு தெரியும்.

எனவே தான் ஈ.வெ.ராவின் சுடுசொற்களை, உணர்ச்சிபூர்வமாக அணுகி, ஈ.வெ.ராவை இழிவுபடுத்தும் தவறை, மேலே குறிப்பிட்ட பிராமணர்களும், அண்ணாவும் செய்யவில்லை.

அது போலவே, சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' சொல்லையும், நாம் உணர்ச்சிபூர்வமாக அணுகுவதை தவிர்த்து, அவரது கோபத்திற்கு நியாயமான, 'பொர்க்கி' தமிழர்கள் யார்? யார்? தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்? அவர்களின் செல்வாக்கையும், எண்ணிக்கையையும் எப்படி குறைப்பது? என்று அறிவுபூர்வமாக அணுகுவதே சரியாகும்.

எனவே, ராஜாஜியை விட‌ அதிக படிப்பும், புலமையும் உள்ள சுப்பிரமணியசுவாமி, ராஜாஜி போலின்றி, ஈ.வெ.ராவின் துணிச்சலுடனும், அறிவுபூர்வ போக்கில், 'சசிகலா பினாமி ஆட்சியை' ஆதரித்துள்ளார்.

தி.மு.கவிடமும், கலைஞர் கருணாநிதியிடமும், தோற்றது ராஜாஜி, என்பது கடந்த கால வரலாறு.

சுப்பிரமணியசுவாமியிடம் சசிகலா நடராஜனும், அவர்களின் 'எடுபிடியாக' உள்ள அ.இ.அ.தி.மு.கவும் தோற்க இருப்பது, விரைவில் அரங்கேற உள்ள வரலாறா? என்ற கேள்விக்கு விடை தெரியும் காலமும், அதிக தொலைவில் இல்லை.

அவ்வாறு சசிகலா குடும்பம் எவ்வாறு 'அரசியல் தற்கொலை' போக்கில், பயணித்து வருகிறார்கள்? என்பது தொடர்பான, கீழ்வரும் ஆய்வின் முக்கியத்துவமும், மேற்குறிப்பிட்ட விடை கிடைக்கும் போது, அதிக முக்கியத்துவம் பெறலாம்.

இந்திய விடுதலைக்கு முன், நேருவால் ஓரங்கட்டப்பட்ட ராஜாஜி, ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கையை ஆதரித்ததை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

பின் அதே ராஜாஜி, தி.மு.கவின் வளர்ச்சி போக்கின் மீது செல்வாக்கு செலுத்த முடியும் என்று நம்பி, தி.மு.க 1967 ஆட்சியைப் பிடிக்கவும், பின் 1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகவும் துணை புரிந்தார். பின்  அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி மதுவிலக்கை ஒழித்த பின், ராஜாஜியும் அந்த 'பொதுவாழ்வு வியாபார சமூக செயல்நுட்பத்தில்' ஈ.வெ.ரா, அண்ணாவைப் போலவே ஏமாற்றமடைந்து, பின் மனமுடைந்து மறைந்தார்.

ஒரு சமூகத்தில் தனி மனிதர்கள் செயல்பாடுகளிலிருந்து, சமூக மேல் மட்டத்தில் செயல்படும் தொகுவிசைகள் (Resultant Forces) எவ்வாறு தோன்றுகின்றன? என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2017/02/xenophobia-httpsen.html)

ஈ.வெ.ரா, காமராசர், அவரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி போன்ற இன்னும் பலர், அடிமட்ட தொண்டர்களின் தொடர்புடன், மேல் மட்ட தலைவர்களாக பயணித்தவர்கள் ஆவர்.

ஆனால் ராஜாஜி, சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் அந்த அடிமட்ட தொடர்பின்றி, பொதுமக்களின் கருத்தைப் பற்றிய கவலையின்றி, மேல் மட்டத்தில் இருந்து கொண்டு, சமூகத்தில் வெளிப்படும் - தி.மு.க, கலைஞர் கருணாநிதி, சசிகலா நடராஜன், அவர்களின் அ.இ.அ.தி.மு.க - போன்ற 'தொகுவிசைகளின்' மீது;

தமது அறிவு, அனுபவ அடிப்படைகளில், 'நாட்டிற்கு நல்லது' என்ற திசையில், அந்த தொகுவிசைகளின் நல்ல/தீய திசை பயணங்கள் மீது செல்வாக்கு செலுத்தி பயணித்தவர்கள்/பயணிப்பவர்கள் ஆவர். அதில் அவர்கள் பெறும் வெற்றி/தோல்வி எல்லாம், சமூகத்திற்கு நல்லதான‌/கெட்டதான விளைவுகளை ஏற்படுத்தும்.

முதலில் ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜியும் தோற்ற இடம் எது? என்று தெரிந்தால் தான்,

இன்று சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவில் பயணிக்கும் 'சசிகலா பினாமி ஆட்சியின்' போக்கு பற்றிய தெளிவு கிடைக்கும்.

தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருளானது காலனிய சூழ்ச்சியில் திரிந்து, அந்த சூழ்ச்சியில் சிக்கி, ஈ.வெ.ரா அவர்கள், 'திராவிடர் கழகம்' தொடங்கிய பின்னர், காங்கிரசில் முளை விட்டு வளர சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'பொது வாழ்வு வியாபார சமூக செயல்நுட்பமானது', ஈ.வெ.ராவின் 'இணையற்ற' தியாகத்தால் உருவாகியிருந்த, சமூக ஆற்றலை 'தீனியாக்கி' வளர்ந்த ஆபத்தினை, முதலில் ஈ.வெ.ரா கண்டுபிடித்து, தி.க பொதுச் செயலாளராக இருந்த, அண்ணா புறக்கணித்த, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் வெளிப்படுத்தினார்.

பின் அதிலிருந்து அவர் எவ்வாறு சறுக்கி, அந்த சறுக்கலிலும் தோற்று, 1949 முதல் 1967 வரை தனது பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் மீண்டும் எச்சரித்து, அதிலும் தோற்று, 1967இல் அண்ணாவுடன் சமரசமாக;

1967 முதல்வரான பின், அண்ணாவும் அந்த பொதுவாழ்வு வியாபார சமூக செயல்நுட்பமானது, தமது கட்சியில் தனது கட்டுப்பாட்டையும் மீறி, அச்சுறுத்தும் அளவுக்கு வளந்திருப்பதை கண்டு, மனம் நொந்தார்.

அந்த காலக்கட்டத்தில் ஈ.வெ.ரா 'முனிவராக' பொதுவாழ்விலிருந்து ஒதுங்க எண்ணினார் என்பதையும், அண்ணா விரைவில் மரணமடைய விரும்பினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

அவ்வாறு மனமுடையாமல், ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜி அவர்களும், அந்த காலக்கட்டத்தில்,

தி.மு.கவின் குடும்ப ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடம், 'வேகமாக' வளர்ந்து வந்த, வெறுப்பையும், கோபத்தையும் கணக்கில் கொண்டு, 'பொது வாழ்வு வியாபார' எதிர்ப்பு திசையில், பயணித்திருந்தால், எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க வந்திருக்காது. மாறாக காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' ஆட்சியைப் பிடித்து, தமிழ்நாடு தப்பித்திருக்கலாம். அவ்வாறின்றி எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்ததன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாட்டில் இன்று 'சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேறியுள்ளது.

கலைஞர் கருணாநிதியின் சாதுர்யம் இல்லாமல், நடராஜன் 'ஆம்  குடும்ப ஆட்சி தான்' என்று துணிச்சலுடன் அறிவித்து, சசிகலா குடும்ப அரசியலானது தற்கொலைப் பாதையில் பயணிக்கிறதா? சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவானது அந்த தற்கொலையை தடுக்குமா? அல்லது துரிதப் படுத்துமா? என்ற ஆய்விற்கு, கீழ்வருபவை துணை புரியலாம்.

ஜெயலலிதா தனக்கு எதிராக சதி செய்ததாக, ஊடக வெளிச்சத்தோடு சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து துரத்தியோடு, அவரது கணவர் நடராஜன் உள்ளிட்டவர்களை சிறையில் தள்ளியதானது, பொது மக்களிடம் எந்த அளவுக்கு 'பொதுக்கருத்தாக' வேர் பிடித்திருக்கும்?

என்பது தெரியாமல்;

'மர்மமான' முறையில் ஜெயலலிதாவை அப்பொல்லோவில் அனுமதித்து,  74 நாட்கள்,  தமிழக முதல்வர் பொறுப்பேற்றிருந்த பன்னீர்செல்வம் உள்ளிட்டு எவரையும் பார்க்க அனுமதிக்காமல்,  எப்போது மரணமடைந்தார்? என்பது உள்ளிட்டு, 'மர்மமாகவே' ஜெயலலிதா மறைந்ததால்;

மேலே குறிப்பிட்ட பொதுக்கருத்தானது,  சசிகலா குடும்பம் மீது எந்த அளவுக்கு பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது? என்பதும் தெரியாமல்;

'முதல்வர்' கனவில், தனது 'வரை எல்லைகள்'(limitations) தெரியாமல், 'இந்தியா டுடே' நிகழ்ச்சியில், தமிழக முதல்வரை அவமதித்தன் மூலம், அந்த கோபக்கனலானது எந்த அளவுக்கு அதிகரித்தது என்றது தெரியாமல்;

'வளர்த்த தாயின்' இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாத அளவுக்கு, எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் அடைத்து;

ஒரு வாரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு உச்ச நீதி மன்ற‌ தீர்ப்பு வர இருந்தது தெரிந்தும்;

'முதல்வராக' விரும்பிய சசிகலாவிற்கு, சுப்பிரமணிய சுவாமி 'அசாத்திய துணிச்சலுடன்' பகிரங்கமாக ஆதரித்து, ஆளுநருக்கும் அழுத்தம் கொடுத்தார்.

ராஜாஜியைப் போலவே, பொது மக்களின் கருத்தைப் பற்றிய கவலையின்றி, பொதுவாழ்வில் பயணித்து வரும் சுப்பிரமணிய சுவாமி, சசிகலாவை ஆதரித்து வந்த, அந்த கட்டத்தில் தான்;

தமிழர்கள் தொடர்பாக, 'பொர்க்கி' (porki ) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் பலரின் கோபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

'ஆரிய - திராவிட' கவசத்துடனும், தி.க தலைவர் கி.வீரமணியின் (பேரா. அ. மார்க்ஸ் உள்ளிட்ட இந்துத்வா எதிர்ப்பாளார்களின்) ஆதரவுடனும் பயணித்த (சசிகலா) நடராஜனும், அவர் குடும்பத்தினரும், சுப்பிரமணிய சுவாமி மீது கோபப்படவில்லை. மாறாக அவர் தயவில், சசிகலா முதல்வராகும் முயற்சி தான் தொடர்ந்தது. அதற்காக கி.வீரமணியோ, பேரா.அ.மார்க்ஸ் போன்றவர்களோ, சசிகலாவை, நடராஜனை கண்டிக்கவில்லை: நடராஜனை புரவலராகக் கொண்டுள்ள 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தொடர்புள்ள, தமிழ் அமைப்புகளின் தலைவர்களோ, உணர்ச்சிக்கவிஞர்கள்/எழுத்தாளர்கள்/பேச்சாளர்கள் எவருமோ (வைகோ உள்ளிட்டு), நடராஜனை கண்டித்ததாக தெரியவில்லை.

ஒருவேளை சுப்பிரமணிய சுவாமியின் 'அந்த' ஆதரவும், இந்துத்வா எதிர்ப்புக்கு துணை புரியும் என்று அவர்கள் கருதினார்களா? என்பதும் தெரியவில்லை. 

அதே போல, காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரருடன் ஆலோசனை நடத்திய, அ.இ.அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் தினகரனையும் அவர்கள் எல்லாம் கண்டிக்கவில்லை. (http://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-meets-jeyandrar/slider-pf225408-276271.html

ஒருவேளை ஜெயேந்திரரின் 'அந்த' ஆதரவும், இந்துத்வா எதிர்ப்புக்கு துணை புரியும் என்று அவர்கள் கருதினார்களா? என்பதும் தெரியவில்லை.

தமிழை இழிவு படுத்தினாலும், அதனை 'இந்துத்வா எதிர்ப்பு' உணர்ச்சிபூர்வ போதையில் கண்டு கொள்ளாமல், செல்டன் பொல்லோக் போன்ற மேற்கத்திய எழுத்தாளர்களின் 'தயவில்', 'இந்துத்வா எதிர்ப்பில்', 'அறிவுபூர்வ சப்பாணிகளாக', தமிழ்நாட்டில் யார்? யார்? பயணிக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.com/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html )

இந்திராகாந்தி அரசு, 'பெரியார்' கட்சிகள், 'சிவசேனா', வெளிநாட்டு சக்திகள், என்று எந்த பக்கத்திலிருந்தும் ஆதரவு வந்தாலும், 'உண்மையான' ஆதரவு எது? ‘தூண்டில் மீன்’ எது? என்று பிரித்தறியும் புரிதல் இன்றி, பிரபாகரன் பயணித்து, முள்ளிவாய்க்காலில், 'தனி ஈழ கோரிக்கையை' சமாதியாக்கிய பின்னும், அறிவுபூர்வ விமர்சன பார்வையின்றி, உணர்ச்சிபூர்வமாகவே தொடர்ந்து, அவர்கள் எல்லாம் பயணிக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. 

ஆனால் சசிகலா குடும்ப ஆட்சியை 'பகிரங்கமாக' எதிர்த்த, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை, 'வின்னர்' வடிவேலு பாணியில், எதிர்த்து, 'அம்பலமானார்' நடராஜன். 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html )

சிறையில் அடைக்கப்பட்ட பின்னும், அதே 'அரசியல் தற்கொலை' போக்கில், 'சசிகலா பினாமி ஆட்சியா'? என்று பொது அரங்கில் விவாதிக்கும் அளவுக்கு, சசிகலா குடும்பமானது, 'அவமான' திசையில் பயணிக்கிறது.

அதுவும் தெரியாமல், சசிகலாவை சென்னை போயஸ் கார்டன் வீட்டில், 'சிறைச்சாலை' என்ற பெயரில் 'சட்டத்தை ஏமாற்றி', 'தமிழக அரசின் தலைமை செயலகமோ'? என்ற, விவாதம் அரங்கேற, வழிவகுக்கும் நோக்கில், முயற்சிகள் நடக்கின்றனவா? அதற்கும் சுப்பிரமணிய சுவாமியின் தயவை நாடியுள்ளார்களா? என்பவை தொடர்பான‌ உண்மைகளையும் நீண்ட காலம் மறைக்க முடியாது. 
 
‘தமிழ்நாட்டு மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ற கவலையின்றி;

முள்ளிவாய்க்கால் போருக்கு முன்னும், போர் நடந்த போதும், பின்னும், ராஜபட்சேயை சுப்பிரமணியசுவாமி ஆதரித்தது போல;

இன்று 'சசிகலாவின் பினாமி' ஆட்சி அரங்கேற்றத்தையும், சுப்பிரமணியசுவாமி ஆதரித்ததுள்ளார்.

சுப்பிரமணிய சுவாமியின் 'பொர்க்கி' வரையரையை கணக்கில் கொண்டால்;

'பொர்க்கி' இந்தியர்களை வளர்த்து, இந்தியாவில் காலூன்றிய காலனி ஆட்சியில் உருவான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிலும், அந்த 'பொர்க்கி' நோய் ஊடுருவி, உண்மையான தேசபக்தர்களுடன் மோதலுக்குள்ளாகி, பயணித்த சூழலில்;

தமிழ்நாட்டிலும்  காங்கிரசில் முளை விட்டு, வ.உ.சி போன்ற காந்தியின் எதிர்ப்பாளர்களை காவு வாங்கி, ஆனாலும் நீதிக்கட்சி தலைவர்களின் நேர்மையான சமூக சூழலில்;

வளர சிரமப்பட்டுக் கொண்டிருந்த 'பொது வாழ்வு வியாபார சமூக செயல்நுட்பமானது', 1944இல் காலனிய சூழ்ச்சியில் நீதிக்கட்சித் தலைவர்களுக்கும், ஈ.வெ.ராவிற்கும் இருந்த தொடர்பைத் துண்டித்து;

ஈ.வெ.ராவின் 'இணையற்ற' தியாகத்தால் உருவாகியிருந்த, சமூக ஆற்றலை 'தீனியாக்கி' வளர்ந்த ஆபத்தினையும், அந்த 'பொர்க்கி' நோயின் வளர்ச்சியால், ஈ.வெ.ரா, அண்ணா, ராஜாஜி போன்றோர் பொதுவாழ்வில் மனமுடைந்து மறைந்ததையும், ஏற்கனவே பார்த்தோம்.

காலனி சூழ்ச்சியில் இந்தியாவில் முளைவிட்ட 'பொர்க்கி' நோயானது, தனித்துவமான தமிழ்நாட்டு சூழலில், நேர்மையாக உருவாகும் சமூக ஆற்றல்களை எல்லாம் 'தமிழ் இன உணர்வு' முகமூடியில் 'கவர்ந்து', அந்த நோயின் 'உச்சக்கட்ட வெளிப்பாடாக', இன்று 'சசிகலா பினாமி ஆட்சியானது' அரங்கேறியுள்ளதா?

தமக்கும் தமது குடும்பத்திற்கும் 'வெளியில் தெரியாத சுயநல நீதி', மற்ற தமிழர்களை ஏமாற்ற 'தமிழ் இன உணர்வு முகமூடி', என்று பயணித்து வரும் தலைவர்களின் ஆதரவோடு, அந்த அரங்கேற்றம் நடந்துள்ளதா?

அந்த பொதுவாழ்வு வியாபார 'பொர்க்கி' நோய்க்கு எதிராக, தமிழ்நாட்டில் வெளிப்பட்ட கோபக்கனலை, ஈ.வெ.ராவும், ராஜாஜியும் 'உணர்ந்து', காமராஜின் 'ஸ்தாபான காங்கிரஸ்' வளர்ச்சிக்கு திருப்பத் தவறியதன் விளைவே, 'சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேற்றத்திற்கு வழி வகுத்ததா? இன்று அந்த கோபக்கனலை 'உச்சமாக்கும்' திசையில், சசிகலா குடும்ப அரசியல் பயணிப்பதற்கு, 'வினை ஊக்கியாக' (catalyst) சுப்பிரமணிய சுவாமி செயல்பட்டு, அந்த பொதுவாழ்வு 'பொர்க்கி' நோயின் அழிவிற்கு, பங்களித்து வருகிறாரா? ராஜாஜியைப் போலவே; பொதுமக்களின் கருத்தைப் பற்றிய கவலையின்றி, தொகுவிசைகளின் (Resultant Forces) மீது, 'நாட்டு நலன்' நோக்கி செல்வாக்கு செலுத்தும் 'சமூக செயல்நுட்ப'த்தினை கையாண்டு.

என்பவை எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சி நோக்கிய ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியவை ஆகும்.

‘சுப்பிரமணிய சுவாமி அன்று ராஜபட்சேயை ஆதரித்ததும், இன்று நடராஜன் செல்வாக்கில் இயங்கும் சசிகலாவை ஆதரித்ததும், நடராஜன் 'ஆரிய Vs திராவிட' கவசத்தை வெளிப்படுத்தியபோது, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கமானவர் நடராஜன் அருகே நின்றிருந்ததும் 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_18.html);

'ஜெயலலிதா சசிகலா சொத்து குவிப்பு வழக்கு' மற்றும் 'ஜல்லிக்கட்டு ஆதரவு' வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தானாகவே தொடுத்ததும்;

சுயலாப நோக்கின்றி, தனது அறிவு அனுபவ அடிப்படைகளில், 'தனது நாட்டிற்கு நல்லது' என்ற நோக்கில், முரண்பாடுகளின்றி, சுப்பிரமணியசுவாமி செயல்பட்டு வருகிறார் என்பதானது;

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பெறும் ஆய்வு முடிவாகும். அந்த முடிவுக்கு முரணாக எந்த ஆய்வு வெளிப்பட்டாலும், அதனையும் திறந்த மனதுடன் அணுகி, எனது ஆய்வுமுடிவினை நெறிப்படுத்திக் கொள்வேன்.....சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் 'பொர்க்கி' (porki) தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், 'பொறுக்கி' விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும். ’ என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ('ராஜ பட்சே' பாணி  'சசிகலா குடும்ப அரசியல்'; அடையாளம் காட்டிய சுப்பிரமணிய சுவாமிக்கு நன்றி; 
http://tamilsdirection.blogspot.com/2017/02/xenophobia-httpsen.html

ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இருந்து, ஜெயலலிதாவால் சதிக்குற்றம் சாட்டப்பவர்களின் 'எடுபிடிகளாக', ('திருச்சி பெரியார் மையம்' 'பெரியார் போதை’யில், 'எனது சமூக குற்றம் மூலம் வளர்ந்து'(?), 'சசிகலா குடும்ப அரசியல்' எடுபிடிகளான 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு) இன்று வலம் வருபவர்கள் எல்லாம், சுப்பிரமணியசுவாமி குறிப்பிட்ட 'பொர்க்கி'(porki) வரையறையின், நடமாடும் இலக்கணங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இதே சுப்பிரமணியசுவாமியின் ஆதரவை 'நம்பி',  இஸ்ரேலின் உளவு நிறுவனம் 'மொசாத்' மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதப் பயிற்சி பெற்றது தொடர்பான சான்றினையும், 'ராஜிவ் கொலைகளும் சதிகளும்' புத்தகத்தில் வெளியிட்டிருந்ததையும், ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  'விடுதலைப் புலிகள் தொடர்பான ‘திருச்சி பெரியார் மையஎச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானதும்.........அறிவு ஜீவி ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவாக (குறிப்பு 2 கீழே), முள்ளிவாய்க்கால் போரில், சரியான நேரத்தில் சரணடைய கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, 'தவறான நேரத்தில்' சரணடைய முயன்றதே, பேரழிவுக்கு காரணமா? என்பதானது, ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியதாகும்.' என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_27.html )

‘விடுதலைப் புலிகளின் 'முள்ளி வாய்க்கால் பேரழிவு' பயணத்திற்கு துணை போன, தமிழ்நாட்டு ஆதரவாளர்களில் பலர், அந்த பேரழிவிற்குப் பின், நடராஜன் துணையுடன் 'முள்ளி வாய்க்கால் முற்றம்' தமிழ்நாட்டில் அமைத்தார்கள். தமிழ்நாட்டிலும் முள்ளி வாய்க்கால் அழிவை நோக்கிய பயணத்திற்கு, அது துவக்கமாக அமையுமா?

'அமையும்' என்று அஞ்சி, சுப்பிரமணிய சுவாமி, அந்த அழிவானது ("முள்ளிவாய்க்கால் பேரழிவானது, 'ஈழப் பகுதிகளில்' மட்டுமே பாதித்தது போல‌) தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தியாவின் மற்ற பகுதிகளை பாதிக்க விடக் கூடாது, என்ற நோக்கில், சசிகலாவை சிறைக்கு அனுப்பிய வழக்கையும் தொடுத்து, இன்று சசிகலாவை பெங்களுரு சிறையிலிருந்து, சென்னை போயஸ் கார்டன் 'வீட்டு சிறைக்கு'(?) மாற்ற உதவும்  நோக்கில், பயணிக்கிறாரா?

தமிழ்நாட்டிலும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற அக்கறையில், நான் உள்ளிட்டு, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி போன்ற இன்னும் பலர் பயணிக்கிறோமா?

எந்த பயணம் வெற்றி பெறும்? என்பது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்.’ என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

தமிழ்நாட்டிற்கு தலைக் குனிவான சசிகலாவின் 'பினாமி ஆட்சியை', சுப்பிரமணிய சுவாமியின் துணையுடன் அரங்கேற்றியுள்ள 'சசிகலா குடும்ப அரசியலின்' முள்ளிவாய்க்கால் அழிவு பயணம் தொடங்கி விட்டதா? என்பதானது வெகு சீக்கிரம் தெரிந்து விடும்; 2015 டிசம்பர் சென்னை வெள்ள நிவாரணத்தில், ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்ட 'வித்தியாசமான' புதிய அணுகுமுறைகளில்.

அநேகமாக அதன் 'முதல் வெப்பமானது', சசிகலா பினாமி ஆட்சி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை, சமூக ரீதியில் 'சுடும்' அளவுக்கு;

அத்தகையோரின் குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மூலமாக வெளிப்படத் தொடங்கினால் வியப்பில்லை.’
(http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post.html )

தி.மு.கவின் குடும்ப அரசியலுக்கு எதிரான 'சமூக வெப்பத்தில்', ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் சாகும் வரை முதல்வராகவே இருந்தார்.

அதன் பின் அதே வழியில் பயணித்த ஜெயலலிதாவை வீழ்த்தி, மீண்டும், மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததற்கு, 'சசிகலா குடும்ப ஆதிக்கம்' மீது பொது அரங்கில் வெளிப்பட்ட 'சமூக வெட்பமே' காரணம், என்பதை ஜெயலலிதாவும் உணர்ந்து, அக்குடும்பத்தை ஒதுக்கியே, மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

ஜெயலலிதாவின் 'ஆதாய அரசியல் வலைப்பின்னலை', தமது பண வன்முறை பலத்தால் 'அபகரித்து', சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்களை பலநாள் அடைத்து, 'பினாமி ஆட்சி' அரங்கேறியுள்ள போக்கில்;

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போக்கில் வெளிப்பட்ட 'சமூக வெப்பம்', 'குடும்ப ஆட்சிக்கு எதிரான சமூக வெப்பம்', எல்லாம் ஒன்று சேர்ந்து, குவியத் தொடங்கியுள்ளது தெரியாமல்;

சசிகலாவை 'போயஸ் கார்டன் சிறை' என்ற பேரில், தமிழக அரசின் 'செயல்படு தலைமை செயலகமாக' ( ipso facto secretariat ) மாற்றும் முயற்சி வெற்றி பெறுமானால்;

அதுவே, மேலே குறிப்பிட்ட சமூக வெட்பம் காரணமாக, சசிகலா குடும்ப அரசியல் சமாதியாவது, 'பொதுவாழ்வு வியாபாரத்தின்', 'உச்சக்கட்ட மரணமாக' ( climax demise) அமைந்தால், வியப்பில்லை.

அந்த 'சமாதி' நோக்கிய 'சசிகலா குடும்ப அரசியல்' பயணத்தின் வினைஊக்கியாக(Catalyst), சுப்பிரமணிய சுவாமியின் பங்களிப்பும்,  வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

பிரபாகரனை 'மாவீரன்' என்று அறிவித்து ஆதரித்தார் வைகோ; பிரபாகரன் 'முள்ளி வாய்க்கால் அழிவில்', 'தமிழ் ஈழ' கோரிக்கையும் சமாதியானது.

இன்று 'வீரமங்கை வேலுநாச்சியாருக்கு இணையானவர் சசிகலா' என்று அறிவித்து ஆதரிக்கிறார் வைகோ; 'சசிகலா குடும்ப அரசியல்' சமாதியாகுமா? 
(https://twitter.com/Endhirapulavan/status/808684648935071749/photo/1); 

ஒரு வேறுபாடு; 'சசிகலா குடும்ப அரசியல்' சமாதி என்பது,  தமிழ்நாட்டின் விடிவாகும். (‘சசிகலாவுக்கு சிறை: கங்கை அமரன் இன்று நிம்மதியாக உறங்குவார். பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் ஆன்மாக்கள் சாந்தியடையும்!’- பாமக ராமதாஸ் டுவிட்டரில் & ‘ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!’- சமஸ் http://tamil.thehindu.com/opinion/columns/ ) 

முன்னது அழிவு என்றால், பின்னது அழிவுக்கு அழிவு ஆகும். கணக்கில் கூட எதிர்குறியை எதிர்க்குறியால் பெருக்கினால், கிடைப்பது நேர்க்குறியாகும். நேற்று ராஜபட்சேயை ஆதரித்து, இன்று சசிகலாவை ஆதரிக்கும், 'அந்த பெருக்கலுக்கு' வினை ஊக்கி (Catalyst) சுப்பிரமணிய சுவாமி, என்பது நிகழ்கால வரலாறு.

அதாவது ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜியும் தோற்க காரணமான 'பொதுவாழ்வு வியாபாரம்' மரணத்தை தழுவும்போது, அதில் சுப்பிரமணிய சுவாமியின் பங்களிப்பும் இடம் பெறும். எனவே அவர்கள் தோற்ற இடத்தில், சுப்பிரமணியசுவாமி வெற்றி பெற்றால், வியப்பில்லை. 

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்ட மாணவர்கள், இளைஞர்களின், அடுத்த 'பேட்ச்' ( Batch - இப்போது +2 படிப்பவர்கள்) 'தலையெடுக்கும்போது', இன்னும் 10 வருடங்களுக்குள், 'நியுரெம்பெர்க்'(https://en.wikipedia.org/wiki/Nuremberg_trials) மாதிரியில், தமிழ்நாட்டு அரசியல் கொள்ளையர்களை தண்டித்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் 'சாதனை'யும் நிகழ்ந்தாலும், வியப்பில்லை.

No comments:

Post a Comment