Friday, January 27, 2017

 'உதவிகளும்', ‘தூண்டில் மீன்களும்’ ; சீமானும், ராகவா லாரன்சும்



அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும், வெற்றி பெற வாய்ப்புண்டா?


சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, சீமான் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

‘மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என்று கேள்வி எழுப்பிய சீமான், அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும், மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அவர்களே முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.’

தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த சீமான், ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரையும் நான் நேரில் பார்த்ததில்லை; அறிமுகமும் கிடையாது; அவர்கள் இயக்கிய திரைப் படங்களையும் நான் பார்த்ததில்லை.

ராகவா லாரன்ஸ் ஆடியுள்ள நடனங்களையும், இயக்கிய நடனங்களையும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நான் மேற்கொண்டு வரும் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வினைப் போல, 'நடனத்தின் இயற்பியல்' (Physics of Dancing)  ஆய்வினை, ஆர்வமுள்ள நடன ஆய்வாளருடன் சேர்ந்து மேற்கொள்ளும் போது, அந்த ஆய்வுக்கான உள்ளீடுகளில் (Research inputs), அந்த நடனங்களும் இடம் பெறும். ( ‘நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் (Isadora Dunken ) வழியில்; பிரபு தேவாவும், ராகவா லாரன்சும் மீட்பார்களா?; 
http://tamilsdirection.blogspot.com/2016/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )

அதே போல எம்.ஜி.ஆர், சிவக்குமார் போன்ற திரைப்பட பிரமுகர்கள் வரிசையில், நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் நலிந்தவர்களுக்கும், உடல் - மன சவாலுக்குள்ளானவர்களுக்கும் (Physically & Mentally Challenged), ராகவா லாரன்ஸ் உதவி வருவது எல்லாம், உண்மையென்றால், அவர் வணங்கத்தக்க அளவுக்கு உயர்ந்த மனிதர் என்பது என் கருத்தாகும்.

ஒரு மனிதர் புறத்தில், பிறருக்கு செய்யும் உதவிகள் எல்லாம், அவரது மனதில் எந்த ஈடுபாட்டைத் (interest)  தூண்டுகோலாகக் கொண்டு, அந்த உதவிகள் எல்லாம், அவரிடமிருந்து வெளிப்படுகின்றன? என்பது அவருக்கு மட்டுமே முழுமையாக தெரியும். அவருக்கு உண்மையிலேயே நெருக்கமானவர்களுக்கும், பகுதியாக தெரிய வாய்ப்புண்டு.

அகத்தில் சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாட்டினை, தூண்டுகோலாகக் கொண்டு, புறத்தில் வெளிப்படும் உதவிகள் எல்லாம், அந்த உதவிகள் பெறும் நபருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பும் இருக்கிறது.

தனிநபர் அளவில், அந்த ஆபத்துகளை எவர் சந்தித்தாலும், அது பொது அரங்கில், ஊடகத்தில் அம்பலமாவது அபூர்வமாகும். சுயலாப கணக்கில் 'உதவிகள்' என்ற துருப்புச் சீட்டின் மூலம், தம்மிடம் ஏமாந்த அப்பாவிகளையும், தமிழ்நாட்டையும், சீரழித்து வரும் சமூக கிருமிகள் எல்லாம், 1967க்குப் பின் முளை விட்டு, 1991 முதல் 'வீரியமாக' வளர்ந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட சூழ்ச்சிகரமான உதவிகளை வழங்குபவர்களும், பெறுபவர்களும் பொது வாழ்வில் உள்ளவர்களாக இருந்தாலும், உதவிகள் பெறுவது 'பொது பிரச்சினை' என்ற பெயரில் நடந்தாலும், அந்த சூழ்ச்சிகர சமூக செயல்நுட்பத்தில், உதவிகள் பெறுபவர் நேர்மையானவராக இருந்தால், அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து, அவர் தப்புவதும் அபூர்வமே.

உதவிகளை வழங்குபவரைப் போலவே, உதவிகள் பெறுபவருக்கும், சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாடு இருக்குமானால், அப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாந்து, அவர்களை பொதுவாழ்வில் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்பட அனுமதித்த சமூகமானது, அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து தப்பவே முடியாது.

1980கள் தொடக்கம் வரை இலங்கையில் மலையகத்தமிழர் பிரச்சினைத் தவிர, வேறு எந்த பிரச்சினை பற்றியும், தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு ('பெரியார்' இயக்கத்தில் கொள்கை புலமையாளனாக (Theoretician) பயணித்த நான் உள்ளிட்டு) தெரியாது. மே 19 1982   சென்னை பாண்டி பஜாரில்  மோட்டர் சைக்கிளில் (விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்) பிரபாகரன் ஓட்ட, பின்னால் அமர்ந்து பயணித்த‌ ராகவன்,  ( 'புளோட்' - PLOT-  இயக்க) தலைவர் உமா மகேசுவரனையும்,  அவரது உதவியாளர் ஜோதீஸ்வரனையும் சுட்டதில் அவர் தப்பித்து, பின் நால்வரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட செய்தி மூலமே, பொது அரங்கில், 'ஈழப் பிரச்சினை' பெரும்பாலோரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. 

இன்றைக்கு சுமார் 55 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு அது தெரியும்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த அந்த காலக்கட்டத்தில், ஈழ விடுதலை குழுக்களுக்கு, ‘அபரீதமான உதவிகள்’ எங்கிருந்து, எதற்காக வந்தன? தமிழ்நாடெங்கும் அந்த குழுக்கள் எல்லாம் 'ஆயுத பயிற்சிகளும்', 'கண்காட்சிகளும்', ''பத்திரிக்கைகளும்', கொலைகளும், சித்திரவதை முகாம்களும், செயல்பட்ட அளவுக்கு, சம்பந்தப்பட்ட சட்டங்கள் எல்லாம் 'கண்களை' மூடிக் கொண்ட அளவுக்கு, மத்திய அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்கியது? போன்ற கேள்விகள் எல்லாம், அந்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரித்து பயணித்த, திருச்சி 'பெரியார் மையத்தில்' விவாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் திருச்சி பெரியார் மாளிகையில், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்த, புலவர் இமயவரம்பனிடம், 'காஷ்மீர், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் 'தனி நாடு' கோரும் ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கி வரும், இந்திராகாந்தியின் உதவியை விடுதலைப் புலிகள் பெறுவது, சரி என்றால், நாம் ஏன் (அன்றைய இலங்கை அதிபர்) ஜெயவர்த்தனேயிடம் தனித் தமிழ்நாட்டிற்கு ஆதரவும், உதவியும் பெறக்கூடாது?" என்று நான் கேட்ட போது, அவரால் உரிய விளக்கம் தர முடியவில்லை.

'உதவிகள்' தொடர்பான புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்து, முள்ளிவாய்க்கால் பேரழிவானது, எவ்வாறு வரலாற்று சான்றாகி விட்டது? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

“'சாதி' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இந்தியா பயணித்து வருவதும், 'இனம்', அதன் அடிப்படையில் 'திராவிடர்' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'வித்தியாசமான' போக்கில் தமிழ்நாடு பயணித்து வருவதும், ஆகிய பின்னணியில்; மேற்குறிப்பிட்ட இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலை பற்றிய ஆய்வினையும், மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அத்தகைய ஆய்வின் மூலமே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினா போராட்டத்தில்' ஊடுருவிய சமூக விரோத சக்திகளையும், அவர்கள் மேற்கொண்ட 'ஆதரவு தூண்டில் மீன்' சமூக செயல்நுட்பத்தையும், விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்ததே, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு காரணமா? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html) தமிழ்நாடு அது போன்று 'முள்ளி வாய்க்கால் அழிவு' போன்ற திசையில் பயணிக்காது என்பதையும், 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி' உணர்த்தியுள்ளது. 
(http://www.dinamalar.com/news_detail.asp?id=1697611 )

'தமிழ் இன உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' போன்றவற்றை 'பொது வாழ்வு மூலதனமாக'  கருதி, திராவிட அரசியல் கொள்ளை குடும்பங்களின் 'வாலாக', 'வளமாக' வளர்ந்து வரும், நானறிந்த‌ 'பெரியார் சமூக கிருமிகளை' விட, வேறு வழியின்றி பிழைப்பிற்காக விபச்சாரம் செய்பவர்களும், அந்த விபச்சாரிகளின் தரகர்களும்  மதிக்கத் தக்கவர்களே ஆவர்; ஏனெனில் அவ்வாறு அவர்கள் வாழ்வதன் மூலம், மேல்நடுத்தர, வசதியான தமிழர்களில் பெரும்பாலோர், எந்த அளவுக்கு 'பொது வாழ்வு வியாபாரிகளை' 'உரசாமல்', 'சுயநல பாதுகாப்புடன்' வாழ்ந்து வருகிறார்கள்? என்பதை வெளிப்படுத்தும் 'சமூக சிக்னலாக' (Social Signal), அந்த விபச்சாரிகளும், தரகர்களும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களில் 'அதி புத்திசாலிகள்' அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து வருகிறார்கள்; அந்த சமூக சிக்னலின் அடுத்த கட்ட அபாய எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி.

தமிழ்நாட்டை 'அந்த அரசியல் விபச்சார' நோயிலிருந்து மீட்க 1949 முதல் 1967 வரை ஈ.வெ.ரா அவர்கள் முயற்சித்து, தனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலின்றி பயணித்து தோற்றதன் வெளிப்பாடாக; ‘1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/race-race.html )  ;

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்ததற்கான காரணங்களை, அறிவுபூர்வமாக‌ சமூக பொறுப்புடன் விவாதித்து, தமிழ்நாடு பயணித்திருந்தால்;

'ஈழ விடுதலை' முள்ளிவாய்க்கால் பேரழிவு நோக்கி பயணித்திருக்குமா? என்று இன்று கூட அறிவுபூர்வமாக விவாதிக்கும் சூழல் இருக்கிறதா? என்பதை;

இன்று 'ஈழ விடுதலை' ஆதரவாளர்களாக உள்ள சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தெளிவுபடுத்துவார்களா?

அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்து வரும் உதவிகள் பற்றிய வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability)  நடைமுறையில் உள்ளதா?

இல்லையென்றால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி எந்த சுயலாப அரசியல் உள்நோக்கத்தில், 'ஈழ விடுதலை' குழுக்களுக்கு உதவினாரோ, அந்த உதவிகளிலிருந்து, சீமானின் 'நாம் தமிழர்' கட்சி உள்ளிட்ட, 'தமிழ் உணர்வு' கட்சிகள் எல்லாம் பெற்று வரும் உதவிகள் எவ்வாறு வேறுபட்டது? இந்திராகாந்தி உதவிய காலம் 'டிஜிட்டல்' யுகமல்ல. எனவே 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?'(1988 மார்ச்) உள்ளிட்ட ‘திருச்சி பெரியார் மைய’ எச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானது. 

இன்று 'பொறுக்கி' (குறிப்பு 1 கீழே) என்ற சொல் மூலம், விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் சுப்பிரமணியசுவாமியின் 'உதவியுடன்', விடுதலைப்புலிகள்1980களின் பிற்பகுதியில் இஸ்ரேலின் 'மொசாத்' உளவு அமைப்பு மூலம் ஆயுத பயிற்சி பெற்ற சான்றினை, 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகத்தில் வெளியிட்டிருந்தோம். அதே காலக்கட்டத்தில், இலங்கை இராணுவமும், அங்கே பயிற்சி பெற்றதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். சர்வதேச அரசியல் சூதாட்டங்களில் இது போன்ற உதவிகள் செயல்படும் நுட்பத்தை விளக்கிய, 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression) நூல் அறிமுக கட்டுரையும், அந்த காலக்கட்டத்தில் 'உண்மை' மாத (தி.க) இதழில் நான் எழுதி வெளிவந்துள்ளது. 'ஈழ விடுதலை'க்கான ஆயுதப் போராட்டமானது, எவ்வாறு சர்வதேச சூழ்ச்சியில் சிக்கிய பொம்மலாட்டமாகி, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இட்டுச் சென்றது என்பதை விளக்கி வெளிவந்து கொண்டிருக்கும் பலவற்றில் இதுவும் ஒன்றாகும்; https://wideawakegentile.wordpress.com/2014/09/29/srilanka-mossad-ltte-and-the-rajiv-gandhi-assassination/. அந்த காலக்கட்டத்தில்   EPRLF குழுவின் புரவலராக இருந்த கும்பகோணம் ஸ்டாலினை நான் சந்தித்தபோது, "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை. 'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்று ஆணவத்துடன் பேசினார். மேலே குறிப்பிட்ட பொம்மலாட்டத்தில், EPRLF-ம், அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்களிப்பும், சுவடின்றி மறைந்த போனது ஏன்? என்பது பற்றி, ஸ்டாலினோ, அவரது ஆதரவு 'பெரியார்' கொள்கையாளர்களோ ஆய்வு செய்தார்களா? அல்லது அந்த ஆய்வின் அவசியம் தெரியாமல், 'தனித் தமிழ்நாடு' போதையில், அவர்களில் யார், யார், EPRLF-ஐ அழித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறினார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அறிவுக்கு எதிரான, தனித்தமிழ்நாடு போதையில் சமூகத்திற்கு கேடான உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டில், 'பெரியார் கொள்கையாளர்கள்' எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கினார்கள்? என்பதும், விடுதலைப் புலிகள் தொடர்பான ‘திருச்சி பெரியார் மையஎச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானதும், அதே ' திருச்சி பெரியார் மயமானது', நான் ஒதுங்கிய பின், 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதும், ஒன்றுடன் ஒன்று எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அறிவு ஜீவி ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவாக (குறிப்பு 2 கீழே), முள்ளிவாய்க்கால் போரில், சரியான நேரத்தில் சரணடைய கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, 'தவறான நேரத்தில்' சரணடைய முயன்றதே, பேரழிவுக்கு காரணமா? என்பதானது, ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியதாகும். 

'தான் உழைக்காமல், உழைப்பின் மூலம் உயராமல், ஒரு தலைவரையே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல் கலாச்சாரம்' ('துக்ளக்' 01 - 02 - 2017  கேள்வி - பதில்) உள்ள தமிழ்நாட்டில், அந்த பிழைப்பில் உள்ள தலைவர்களின் 'உதவியையும்' பெற்று பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். உதாரணமாக, ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள; http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) காளிமுத்துவும் அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability)  இல்லாத மனிதரும், குடும்பமும், கட்சியும், அரசும், எந்த அமைப்பும், சமூகத்திற்கு கேடாக பயணிப்பதில் இருந்து தப்ப முடியாது. (‘அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும்’; 
http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

இது டிஜிட்டல் யுகம். சீமானாயிருந்தாலும், ராகவா லாரன்ஸாக இருந்தாலும், நானாக இருந்தாலும், சுயலாப உள்நோக்கங்களை மறைத்து, நீண்ட காலம் பொது அரங்கில் பயணிக்க முடியாது: மற்றவர்களை நோக்கி விரலை நீட்டும் போது, நம்மை நோக்கியும், நமது விரல்கள் இருந்தாக வேண்டும்.

50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணிக்கும், 'படித்த, படிக்கும்' மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும், நாம் தப்ப முடியாது. ஆங்கில அறிவற்ற‌, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ' விட்டில் பூச்சிகளாக, கட்சிகளின் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு 'பலியாகி' வந்தவர்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' குறைந்து வருகிறது. 

'சமூக விரோதிகளும்', அவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களை பின்பற்றும் 'உணர்ச்சிபூர்வ' மாணவர்களும், மறைந்திருந்து காவல் துறையை தாக்கி உசுப்பி விட்டு, காவல் துறை நிதானமிழந்து வன்முறையை கையாளும் போக்கினை, தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, எவ்வாறு 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து வேறுபட்டது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘1938  -  1965  -   2017’;
http://tamilsdirection.blogspot.com/2017/01/1938-1965.html'தனித்தமிழ்நாடு' போதையில் தேசியக் கொடியை அவமதிப்பவர்களையும், பா.ஜ.கவில் உள்ள 'சமூக பிரிவினை' போக்குள்ளவர்களையும், 'அடையாளம்' கண்டு எதிர்க்கும் மாணவர்களும், 2017 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். (https://www.facebook.com/arasezhilan/videos/10206226398337784/இந்திய அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி அவமதிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு உள்ளிட்டு எந்த போராட்டமாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் ஊறு விளைவிக்காமல், வன்முறைக்கு இடம் கொடுக்காமல், நீதி மன்றம் வழங்கும் தண்டனையை எதிர் வழக்காடாமல் ஏற்று, அனுபவித்து பயணித்தவர் ஈ.வெ.ரா ஆவார். 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில் ஊடுருவி, தேசியக் கொடியை அவமதித்து, போராட்டத்தில் இருந்த மாணவர்களால் கண்டிக்கப்பட்ட 'தனித்தமிழ்நாடு', 'பெரியார்' ஆதரவாளர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், ஈ.வெ.ராவின் போராட்ட அணுகுமுறையை மக்கள் மன்றத்தில் அசிங்கப்படுத்திய சமூக குற்றவாளிகள் ஆவர்.

“கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதைக் கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி நாள் வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்? போலீசார் நினைத்திருந்தால் முதல் நாளிலேயே மெரினாவில் கூடவிடாமல் போராட்டக்காரர்களை அடித்து விரட்டி இருக்க முடியும். அவர்கள் கடைசி நாள் வரை பாதுகாப்பு அளித்தனர். கலவரத்துக்கு காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. முதல்வரும், பிரதமரும் முயற்சி எடுத்ததால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி நிரந்தர சட்டம் நமக்கு கிடைத்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி. அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு வெற்றி விழா நடத்தி இனிப்புகள் வழங்கி இருவரையும் பாராட்டுவோம். மாணவர்கள் யாரேனும் பிரதமர், முதல்வரை தவறாகப் பேசி இருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். மாணவர்களைக் கைது செய்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.” ( http://tamil.oneindia.com/news/tamilnadu/ragava-lawrence-statement-on-the-end-jallikkattu-protest-272719.html ) என்ற ராகவா லாரன்ஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும்,  'தீர்வு' தொடர்பான தெளிவின்மையே, சமூக விரோத சக்திகள் ஊடுருவி, திசை திருப்பி, வன்முறைக்கு காரணமாகி, அடுத்த முறை இந்த தவறு அரங்கேறாமல் இருக்க, தமிழ்நாட்டு மக்களுக்கே பாடம் புகட்டி விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

போராட்டத்தின் ஊடே, எது தீர்வு? என்று வழிகாட்டும் நம்பகத்தன்மையுள்ள குழு தலைமை உருவாகியிருந்தால், போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்திருக்குமா? அவ்வாறு குழு தலைமை உருவாக இருந்த வாய்ப்பானது, 'சுயலாப அரசியல்' நோக்கில் ஊடுருவிய சக்திகள் மூலம் சிதைக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை காணாமல், அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும் வெற்றி பெற வாய்ப்பில்லை.

மேற்குறிப்பிட்டது உள்ளிட்டு, எனது பதிவுகள் தொடர்பாகவும், அறிவுபூர்வ விமர்சனங்களை வரவேற்கிறேன். மாறாக உணர்ச்சிபூர்வமாக, 'தமிழின துரோகி' என்று 'கடவுளால்' நியமிக்கப்பட்ட நீதிபதிகளை போல, என்னைக் கண்டித்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், நமது மனசாட்சிக்கு உட்பட்டு, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன் எனது பயணத்தை, நான் தொடர்வேன்.


குறிப்பு:

1. 'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய 'பொறுக்கி' என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation )  என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் 'பொறுக்கி' தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், 'பொறுக்கி' விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும்.  'பெரியார்' ஈ.வெ.ரா வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில்,  'உண‌ர்ச்சிபூர்வமாக'  இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய‌  அந்த‌  இரண்டு பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள், என்பதும் என் கருத்தாகும்.

என்னை நேரடியாக எதிர்க்க, 'பொறுக்கி' அளவுக்கு கூட துணிச்சலின்றி, என் முதுகுக்குப் பின்னால், என்னை இழிவுபடுத்தி வரும் 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'பொறுக்கியை' விட கேவலமானவர்கள் இல்லையா? 
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

2. 1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம்,  என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். (' தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு; 'தமிழ் ஈழம்'  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark);

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )
எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுவதற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற பல அனுபவங்களிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கவேயாகும்.

No comments:

Post a Comment