Wednesday, December 28, 2016


சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்;

'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?


“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (ஊழல் முளை விடுவதை கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html)

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? இல்லையென்றால், அதே காரணங்களால் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் ஏற்பட்ட சீரழிவிற்கு, அவர்களும் பகுதி பொறுப்பாளிகள் ஆக மாட்டார்களா? என்ற கேள்விகளை, அவர்களில் சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள், இன்றாவது பரிசீலிப்பார்களா?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை பரிசீலிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இன்று திராவிடர் கழகத் தலைவராக இருக்கும் கி.வீரமணி அவர்களுக்கு இல்லையா? 

அதைப் பற்றிய கவலையின்றி;

1967இல் முளை விட்டு வீரியமாக வளர்ந்து வெளிப்பட்டுள்ள, 2G போன்ற‌ ஊழல்களில் தி.மு.கவை காப்பாற்ற,

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு, கொள்கை போராட்டம் அடிப்படையில், ' 'ஆரிய‍ - திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி அவர்கள் ஈடுபட்டுள்ளாரா? என்ற ஆய்வினை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்.  (http://mediavigil.blogspot.in/2010_11_01_archive.html?view=classic )

சசிகலாவை  கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லக்கண்ணு, முத்தரசன், தா. பாண்டியன்  ஆதரிப்பதானது சாதி அடிப்படையிலா? என்ற கேள்விக்கான விடையானது, அந்த தலைவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம். (http://akkinikkunchu.com/2016/12/21/)

மேலே குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் எல்லாம் சுயலாப நோக்கின்றி, கொள்கை அடிப்படையில் சசிகலாவை ஆதரிப்பதாக வைத்துக் கொண்டாலும், அவர்கள் எல்லாம், சசிகலாவை ஆதரிக்க தி.க தலைவர் கி.வீரமணி முன் வைத்துள்ள‌ 'ஆரிய திராவிட' மோதல் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களா? என்ற விவாதமும் இன்று அவசியமாகி விட்டது.

இன்று இந்துத்வாவை எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் அறிவு ஜீவியான திரு.அருணன் அவர்கள், 'திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' என்ற தலைப்பில், மார்க்சிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' இதழில் தொடர் கட்டுரைகள் வெளியிட்டார். அதற்கு மறுப்பாக, திரு.கி.வீரமணியை ஆசிரியராக கொண்ட 'உண்மை' இதழில், 15 - 11 - 1983 முதல் 01  -06 - 1984 வரை, நான் எழுதிய தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. எனது கட்டுரைகள் வெளிவந்த காலக்கட்டத்தில்,  'தீக்கதிர்' இதழில்,1984 பிப்ரவரியில் திரு.அருணன் எழுதிய‌ கட்டுரைகள் வெளிவந்தன. அது தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகள், திரு.கி.வீரமணியை ஆசிரியராகக் கொண்ட 'விடுதலை' இதழில் 26 - 02 - 1984 முதல் 06  - 03 - 1984 வரை, வெளிவந்துள்ளன. 

திரு.அருணன் எழுதிய கட்டுரைகளையும், அவை தொடர்பான எனது மறுப்பு கட்டுரைகளையும் ஒரே புத்தகமாக வெளியிட திரு.அருணன் சம்மதிக்க தயாரா? என்ற கேள்வியை, கடைசியாக வெளிவந்த எனது கட்டுரையில் எழுப்பியிருந்தேன்.

எனது இசை ஆராய்ச்சிகளின் அடிப்படையில், ஈ.வெ.ரா அவர்களின் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை எனது பதிவுகளின் மூலமாக வெளிப்படுத்தி வரும் இந்த காலக் கட்டத்திலும், மேலே குறிப்பிட்டவாறு ஒரே புத்தகமாக வெளியிட, எனது சம்மதத்தினை, இந்துத்வாவை எதிர்ப்பதில் ஒன்றுபட்டுள்ள திரு.அருணன் அவர்களுக்கும், திரு.கி.வீரமணி அவர்களுக்கும், இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சசிகலாவை ஆதரிக்க, திரு.கி.வீரமணி முன் வைத்துள்ள ஆரிய - திராவிடர் கொள்கை பற்றி, திரு.அருணன், மேலே குறிப்பிட்ட கட்டுரைகளில், கீழ்வரும் கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

"இன்றுள்ள பிராமணர்களே ஆரியர்கள் என்றும், இதரர்கள் திராவிடர்கள் என்றும் சொல்வது, சரித்திரத்தை அவரவர் தேவைக்கேற்றார் போல் திரித்து எழுதுவதாகும்." ('திராவிட இயக்கம் ஒரு மார்க்சிய ஆய்வு' பக்கம் 60 )

திரு.அருணன் அவர்களின் நிலைப்பாட்டை ஈ.வெ.ரா அவர்கள் மறுக்கவில்லை என்பதையும், பிராமணர்களை, தமது மனித சமத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்ள வைக்கவே, ஈ.வெ.ரா அவர்கள் 'ஆரியர் - திராவிடர்' கொள்கையை பயன்படுத்தினார் என்ற சான்றினையும், 'உண்மை' இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளேன்.

" இரத்தக்கலப்பு ஏற்பட்டு விட்டதே; ஏன் இன்னும் ஆரியர் திராவிடர் பிரச்சினை நாட்டில் நடமாட வேண்டும்? என்று நம்மை நையாண்டி செய்யும் தோழர்கள் பார்ப்பனர்களின் உயர்தன்மை கைவிடவும்,அவற்றிற்கு ஆதாரமான சாஸ்திர புராண குப்பைகளை கொளுத்தி விடவும், அதற்கு சின்னமான கடவுளைத் தகர்க்கவும் கேட்டுக் கொள்ளவும்; பிறகு வரட்டும் நம்மிடம். இந்த சாதி வித்தியாசம் காரணமாகத் தானே நாம் ஆரிய்த்தை எதிர்க்க நேரிட்டிருக்கிறது." ( 29 09 1948 சிதம்பரம் சொற்பொழிவு, விடுதலை 05 - 10 - 1948 ) மேலே குறிப்பிட்ட கருத்தினை, சென்னை லட்சுமிபுரத்தில் செயல்பட்ட ஒரு பிராமண அமைப்பில், பிராமணர்கள் பங்கேற்ற கூட்டத்திலும், ஈ.வெ.ரா அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார். அந்த உரையானது, வே.ஆனைமுத்துவின் 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனை  தொகுப்பு'  நூல்களிலும் வெளிவந்துள்ளது.

தமது ஆரியர் - திராவிடர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல், மனித சமத்துவத்தையும், நாத்தீகத்தையும் ஏற்றுக் கொண்ட, ஆந்திராவில் வாழ்ந்த 'காந்தீய நாத்தீகரான' பிராமணர் கோராவுடன் ஈ.வே.ரா அவர்கள் சேர்ந்து செயல்பட்டதும் மேற்குறிப்பிட்ட அணுகுமுறையில் தான். அதே போல. 1938 இல் ஈ.வெ.ரா தலைமை தாங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சில பிராமணர்கள் பங்கேற்றதும் அந்த வகையில் தான். இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கு, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினை பகிரங்கமாக கோரி பெற்றதும், அந்த அணுகுமுறையில் தான்.

தி.மு.கவை ஆரம்பித்த போது, 'திராவிடரில்' இருந்த 'ர்'-ஐ நீக்கி, புவியியல் அடிப்படையில் 'திராவிட' என்ற சொல்லை அரங்கேற்றி, அண்ணா தி.மு.கவை தொடங்கி, ஆனாலும் 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்' போல செயல்படும்' என்று அண்ணா அறிவித்ததும், அந்த அணுகுமுறையில் தான்.

அந்த அணுகுமுறையில் பயணித்த ஈ.வெ.ராவும்,முதல்வராக இருந்த அண்ணாவும், பொது வாழ்வில் ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் தத்தம் கட்சிகளில் அரங்கேறியது கண்டு, அவற்றை களைவதில் தமது இயலாமையை உணர்ந்து, மனம் வெறுத்து, ஈ.வெ.ரா 'முனிவராக' விரும்பும் விருப்பத்தை, முதல்வர் அண்ணாவிடம் தெரிவித்தாரா? அண்ணா விரைவில் மரணம் தன்னைத் தழுவ வேண்டும், என்று விரும்பி, அதனை கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம் தெரிவித்தாரா? என்ற கேள்விகள் பற்றி, தி.க தலைவர் என்றைக்காவது கவலைப்பட்டாரா? இனியாவது கவலைப் படுவாரா?

'திராவிடர், திராவிடக் கட்சிகளில், அத்தகைய கவலையின்றி, ‘ஆரியர் –‍ திராவிடர்’ நிலைப்பாட்டினை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உதவும் கவசமாக பயன்படுத்தும் போக்கானது, ஈ.வெ.ரா, அண்ணா ஆகிய தலைவர்களின் மறைவிற்குப்பின் தான் அரங்கேறியதா? என்ற ஆய்வினையும் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வரான பின்,‘ஆரியர் – திராவிடர்’ நிலைப்பாட்டினை ஊழல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க உதவும் கவசமாக பயன்படுத்தும் போக்கானது, முளைவிட்டு வளர்ந்து, அந்த 'புதிய ஆரியர் – திராவிடர் நோயில்' சிக்கி, தி.க தலைவர் கி.வீரமணியும் பயணிக்கிறாரா? என்ற ஆய்வுக்கு, கிழ்வருவதானது உதவும்.

'இனம்' என்ற சொல்லை, காலனிய சூழ்ச்சியில் அறிமுகமான‌,  மேற்கத்திய ‘Race’ பொருளில், ஆரியர் திராவிடர் நிலைப்பாடானது தவறு என்பதை, ஈ.வெ.ரா அவர்கள் மறுக்கவில்லை என்பதையும், பிராமணர்களை தமது மனித சமத்துவ கொள்கையை ஏற்றுக் கொள்ள வைக்கவே, ஈ.வெ.ரா அவர்கள் 'ஆரியர் - திராவிடர்' கொள்கையை பயன்படுத்தினார் என்பதையும் மேலே பார்த்தோம்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் கலைப்பு உள்ளிட்டு, என்னென்ன‌ 'சிக்கல்களுக்குள்ளாகும்' போதெல்லாம், பார்ப்பன சூழ்ச்சி என்று,  எப்போதெல்லாம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்விற்குரியதாகும். உதாரணமாக ஒரு சான்று கீழே;

“நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது?   இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும்.  இராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே;” http://rssairam.blogspot.in/2012/11/blog-post_2.html

1944இல் திராவிடர் கழகம் உருவாகி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் தடம்புரண்டு, உணர்வுபூர்வ போக்கில் சிக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html

அவ்வாறு தடம் புரண்டாலும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு. ராஜாஜி உள்ளிட்டு எந்த பிராமணரையும் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தனது கொள்கை ரீதியிலான பிராமண எதிர்ப்பைப் பெரியார் பயன்படுத்தவில்லை. அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்த்திற்கு 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' பயன்படும் போக்கானது செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது' எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கும், தமிழ்வழி வீழ்ச்சிக்கும், கனிவளங்கள் சூறையாடப்படும் ஊழல் கோரப்பசிக்கும், 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ஆனவை, 'தமிழ் இன உணர்வு' என்ற போர்வையில் பயன்படும் போக்கானது, செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது', எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.

“பிராமணர்களின் அதிக்கத்தை எதிர்த்த பெரியார் , தமது பிராமண நண்பர்களின் தோட்டங்களிலேயே தமது கட்சியின் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.பெரியாரும் ராஜாஜியும்; "இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்." என்று பெரியார் தெரிவித்த கருத்து எதை உணர்த்துகிறது? (‘எனது நண்பர் ராஜாஜி ‘:- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதிலிருந்து… தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ, http://tamil.thehindu.com/opinion/columns/)

பெரியாரும் ராஜாஜியும் நட்பாக இருந்தது போல, தமிழ்நாட்டில் ஆங்காங்கே உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், நேர்மையாகவும் மிகுந்த ஆச்சாரங்களுடன் வாழ்ந்த பிராமணர்கள், நண்பர்களாயிருந்தார்கள். ஒரு பிராமணப் பெண்ணை மணந்து, அசைவ உணவைத் தவிர்த்து, உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டரையும் நான் சந்தித்திருக்கிறேன்.”( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none.html

அண்ணா உயிரோடு இருந்தது வரையிலும், கலைஞர் கருணாநிதி தாம் சந்தித்த சிக்கல்களுக்கு பிராமண எதிர்ப்பைப் பயன்படுத்தியதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அதுவரை, ராஜாஜியுடன் கலைஞர் கருணாநிதிக்கு இருந்த 'உறவு'(?), அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கு, தமிழக முதல்வராகும் வரை உதவியது. எனவே தமது சொந்த சிக்கல் தொடர்பாக, 'பிராமண எதிர்ப்பை'க் கேடயமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதப் போக்கானது, எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்பது ஆய்விற்குறியதாகும்.” ( ‘'ஆர்.எஸ்.எஸ்' மீது தயாநிதி மாறன் குற்றம் சுமத்தியதானது; ‘திராவிட சந்தர்ப்பவாத’த்தின் உச்சமா?’; http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

மேலே குறிப்பிட்ட 'புதிய ஆரியர் – திராவிடர் நோயில்' சிக்கியதன் காரணமாகவே, திரு.கி.வீரமணி அவர்கள், சசிகலாவை ஆதரிக்கிறாரா? என்ற ஆய்வுக்கு, கீழ் வருவதானது உதவும்.
முதல்வர் ஜெயலலிதா மறைவதற்கு முன், தமிழ்நாட்டில் ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டிய தூண்கள் எல்லாம், எவ்வாறு சிதைந்துள்ளன? என்பதை, கீழ்வரும் பேச்சில், தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலே குறிப்பிட்ட கி.வீரமணியின் கருத்தை வழி மொழிந்துள்ளார் கங்கை அமரனும்.
"கொள்ளை அடித்தவர்களின் முகம் வெளியே வருவதில்லை. வரும்போது வரட்டும். போன சொத்தைப் பற்றி கவலையில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் நிலத்தைப் பறித்துக் கொண்டு, 'வாயை மூடிக்கொண்டு போங்கள்' என்று சொல்வார்கள். அப்படித்தான் நாம் போக வேண்டுமா? ஊரைக்கட்டி ஆள்பவர்களானாலும் முடிவில் ஒருபிடி மண்தான் என்பதை பிறகு தெரிந்து கொள்வார்கள்." கங்கை அமரன்; http://www.vikatan.com/news/coverstory/76049-sasikala-encroached-my-land-illegally-alleges-gangai-amaran.art 


அவ்வாறு ஆட்சி நடத்திய முதல்வருக்கு உறுதுணையாக இருந்த, சசிகலாவை ஆதரித்து, அதே கொள்கை போராட்டம் அடிப்படையில், 'ஆரிய திராவிட' மோதல் கவசத்தில், பாதுகாக்கும் முயற்சியிலும் கி.வீரமணி அவர்கள் ஈடுபட்டுள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

“ பிளவை உருவாக்கும் ஆரிய சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க அதிமுகவுக்கு வீரமணி அட்வைஸ் !’

பார்ப்பனத் தலைமையிலான ஆட்சி வரும் வாய்ப்பு இப்படிப் பறிபோய்விட்டதே என்பதால், ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, மெய்க்காப்பாளராக, சேவகியாக, சிறந்த பாசம் காட்டிய தங்கையாகவே வாழ்ந்து, அந்த அம்மையாரின் கஷ்டங்கள், சிறைவாசங்களில் பங்கேற்ற சசிகலாவைப் பற்றி தேவையில்லாமல் பெரும் ஆய்வே நடத்தி, அரசியல் ஆவர்த்தனம் செய்கிறார்கள்.”

"சசிகலா இதுவரை கேடயமாய்ப் பயன்பட்டவர். இனி வாளும்-கேடயமாய் நின்று அதிமுகவுக்குப் பயன்படுவார் என்பது நம் இனமானக் கண்ணோட்டமாகும். போகப்போக இது மற்றவர்களுக்குப் புரியும். வாய்ப்பே தராமல் எவரையும் மதிப்பிடலாமா? நமக்கு தனிப்பட்ட எந்த அபிமானமும் இல்லை. இந்தக் காலகட்டத்தில் தாய்க்கழகம் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றியுள்ளது'' என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்."; http://tamil.thehindu.com/tamilnadu
(‘தேவையே இல்லாமல், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில், சமூக வலை தளங்களில்: 'ஆரிய - திராவிட' மோதல் கொள்கையை கேலிக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாக்க வேண்டுமா?; http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_12.html

'புதிய ஆரியர் – திராவிடர் நோயில்' திரு.கி.வீரமணி சிக்கியிருப்பதானது, 'பெரியார் தந்த புத்தியா' ? சசிகலாவை ஆதரிப்பாதானது எந்த புத்தி? என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். அந்த முயற்சியானது, ஈ.வெ.ரா அவர்களை, 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்கவும் துணை புரியக்கூடும் என்றும் கருதுகிறேன்.

No comments:

Post a Comment