Thursday, December 5, 2013


கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்




பெரியார் தமது கொள்கைகளை எப்போதும் திறந்த மனதோடும் (open minded) அறிவு நாணயத்தோடும் தொடர்ந்து திறனாய்வு செய்து தவறானவற்றைத் தயக்கமின்றி மாற்றிக் கொண்டவர். “கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோமே, உண்மையில் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது?” என்று அவரிடம் கேட்ட போது, எந்த தயக்கமும் இன்றி “வந்த கடவுளைச் சோதித்துப் பார்த்து உண்மையென்றால், கடவுள் உண்டு என்று சொல்லி விடலாம். நமக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட சண்டையா, என்ன?” என்ற வகையில் பதில் சொன்னவர் அவர்.

அவருக்குப் பின் அந்த வழிமுறையைப் பின்பற்றத் தயங்கினால், அவரும் அவரின் கொள்கைகளும் வழிபாட்டுப் பொருட்களாக ஆகிவிடும். அந்த செயல்முறையும் தொடங்கி விட்டதோ என்று நான் சந்தேகப் படுகிறேன்.

நாம் சந்திக்கும் எந்த விஷயத்தையும் ‘பிடிக்கும்’ அல்லது ‘பிடிக்காது’ என்ற வரையரைக்குள் அடக்குவது இயல்பாகி விட்டது. ‘பிடிக்கும்’ அல்லது ‘பிடிக்காது’ என்று எல்லாவற்றையும் கறுப்பு அல்லது வெள்ளையாகப் (கம்யூனிஸ்டுகள் சிகப்பாக) பார்ப்பது வழக்கமாகி விட்டது. அதனால் சமூகத்தில் உள்ள வண்ணங்களைப் பார்க்கத் தவறும் குறைபாடு நம்மைப் பாதிக்கும் (அல்லது பாதித்திருக்கும்). கண் பார்வைக் கோளாறுகளில் வண்ணங்களைப் பார்க்க முடியாத குறைபாடும் ஒன்றாகும். மேற்சொன்ன குறைபாடு அதை விட அதிக பாதிப்புகளை நம் வாழ்வில் ஏற்படுத்த வல்லதாகும்.

‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு உள்ளான முற்போக்காளர்கள் தம்மையும் அறியாமல் ‘முற்போக்கு சாதி (அல்லது அதில் உள்சாதி) வட்டத்தில் சிக்கி விடும் ஆபத்தும் உண்டு. அவ்வாறு தமக்கான பிம்பத்தில் (image) சிக்கிய பின், தாம் சிந்திக்கும் வெளிப்படுத்தும் கருத்துகள் தமது பிம்பத்தைப் பாதிக்குமா வளர்க்குமா என்று யோசித்து செயல்படும் நோய்க்கு அவர்கள் ஆளாவார்கள்.

அதன் பின் நாம் வெள்ளையாகப் பார்க்கின்ற ஒருவரின் குறைபாடுகள் பற்றிய ஆதாரங்கள் நமது பார்வைக்கு வரும் போது பெரும்பாலும் அதைப் பொய் என்று சொல்லி ஒதுக்க முற்படுவோம். அதையும் மீறி அந்த ஆதாரங்கள் உண்மையென்று ஆகி விட்டால் கறுப்பை வெள்ளையாகப் பார்த்து விட்டோமோ என்ற ஐயம் நம்மை வாட்டத் தொடங்கும். நமக்குத் தெரிந்த பிம்பங்கள், குழு அடையாளங்கள் (தலித், தி.க. நக்சலைட், ஆர்.எஸ்.எஸ். முஸ்லீம் போன்ற இன்னும் பிற) மூலமே நமக்குப் பார்க்க பழக்கமாகி, உண்மைகளையும் நல்ல தனி நபர்களையும் அடையாளம் காண முடியாமல் போய் விடும். சில நேரங்களில் உண்மைகளுக்கும் நல்ல தனி நபர்களுக்கும் எதிரான சுயநல முயற்சிகளை ஆதரிக்கும் தவறையும் நாம் செய்ய நேரிடும்.

சமூகத்தில் உள்ள வண்ணங்களை உள்ளதை உள்ளவாறு பார்த்து வாழும் போது தான் நம்மை யாரும் ஏமாற்ற முடியாத வாழ்வை நம்மால் வாழ முடியும். தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு நமது உழைப்பை வீணாக்காமல் சமூகத்திற்கும் ஆக்க பூர்வமான பங்களிப்பை வழங்க முடியும். இல்லையெனில் எதையும் சரியாகப் பார்க்கத் (‘கண் என்னாம்’ – குறள் 573) தெரியாமல் (ஆராயாமல்) கருத்தை உருவாக்கிக் கொள்ளும் (‘தேரான் தெளிவும்’ – குறள் 510) நோய்க்கு (opinion sickness) நாம் ஆளாக நேரிடும்.

உதாரணமாக மறைந்த சீனக் கம்யூனிஸ்டு தலைவர் மா.சே.துங்கை வெள்ளையாக அல்லது சிகப்பாகப் பார்த்து வந்த இங்குள்ள கம்யூனிஸ்டு ஆதரவாளர்களுக்கு 1996-இல் வெளிவந்த ‘The Private Life of Chairman Mao’ (தலைவர் மாவோவின் தனிப்பட்ட வாழ்க்கை) புத்தகம் அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். சகப் போராளிகளைக் காட்டிக் கொடுத்து பாலியியல் அரசியலில் (sexual politics) ஈடுபட்டவராக மாவோவைப் பற்றி அவருக்கு 22 வருடங்கள் தனி மருத்துவராக (personal physician) பணியாற்றிய டாக்டர் லீ ஜிசுய் (Dr. Li Zhisui)  என்பவர் பல தகவல்களை இப்புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இத்தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை எந்த அளவுக்கு மிகைப்படுத்தப்பட்டவை என்பது சார்பற்ற (objective)  ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல் மா.சே.துங்கை வெள்ளையாக அல்லது சிகப்பாகப் பார்த்தவர்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் பொய்களின் மூட்டை என்று கருதுவதும் மா.சே.துங்கை வெறுத்துக் கறுப்பாகப் பார்த்தவர்கள் மேற்சொன்ன புத்தகத்தை உண்மைகளின் பொக்கிஷம் என்று கருதுவதும் முன்பு குறிப்பிட்ட கறுப்பு-வெள்ளைக் குறைபாட்டின் விளைவுகளாகும்.

அடுத்து பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றிய, எனது இசை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த பெரியார் தொண்டர்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய சில உண்மைகளைப் பொது விவாதத்திற்கு உட்படுத்த விழைகிறேன்.

தந்தை பெரியார் என்று குறிப்பிடாமல் பெரியார் ஈ.வெ.ரா. என்று நான் குறிப்பிட்டுள்ளதே பல பெரியார் தொண்டர்களுக்கு எரிச்சலைத் தரலாம்.

இசை ஆராய்ச்சிக்கு முன் நான் பெரியார் இயக்கங்களின் பங்கேற்றிருந்தேன். அப்போது பல பெரியார் தொண்டர்கள் தந்தை பெரியார் என்று அழைத்துப் பெரியாரைக் கடவுள் போல் கருதிச் செயல்பட்டதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். ‘கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். பரப்பியவன் அயோக்கியன். வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்ற பெரியாரின் கருத்துப் படிப் பார்த்தாலும் பெரியாரைக் (மற்றும் திராவிடக் கட்சித் தலைவர்களை) கடவுளாகக் கற்பிப்பதும் பரப்புவதும் வணங்குவதும் அதே வகையிலான தவறுகள் தானே.

தலைவர்களைத் ‘தோழர்’ என்றே அழைக்கும் பழக்கத்தைத் தமிழ்நாட்டில் முதன்முதல் அறிமுகப்படுத்தியவரே பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தான். இங்கு ‘தோழர் ஈ.வெ.ரா.’ என்று நான் அவரைக் குறிப்பிட்டிருந்தால் அது அவரை அவமதிக்கின்ற சொல்லாகவே பெரும்பாலான பெரியார் தொண்டர்களால் கருதப்படும். இன்று சமூகத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ள ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்குப் பெரும்பாலான பெரியார் தொண்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே அதற்குக் காரணமாகும்.

இந்த சமூகத்தில் அதிலும் குறிப்பாக அடித்தட்டு மக்களின் துயரங்களை உணர்ந்து அவற்றைத் தீர்க்க தமது அறிவு அனுபவ அடிப்படையில் உண்மையாக உழைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆவர். அதிலும் அரசியலில் தாம் கடுமையாக எதிர்த்த ராஜாஜியுடன் (இரகசியமாக இல்லாமல்) வெளிப்படையாக அவர் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு உலகில் வேறு எங்கும் நான் கண்டிராத அதிசயமாகும். அதே நேரத்தில் தமிழ்ப் பாரம்பரியம் பற்றிய அவரின் தவறான நிலைப்பாட்டினை நான் எனது இசை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழ் இலக்கியங்களில் திருக்குறள் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான பழந்தமிழ் இலக்கியங்கள் அழிக்கப்பட வேண்டியவை என்பது பெரியாரின் கருத்தாகும்.

“கடவுள்களையும் அவர்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், புராணம், தேவாரம், பிரபந்தம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையுமான கடமையாகும்”

-       24.3.1943 ஜோலார்பேட்டை சொற்பொழிவு – ‘கலையும் நாடகமும்’ குடிஅரசு பதிப்பகம் 1943

பழந்தமிழ் இலக்கியங்களில் மக்களுக்குப் பயன்படும் அறிவுபூர்வமான விஷயங்கள் என்ன இருக்கின்றன என்று பெரியார் சவால் விட்ட போது தமிழ்ப் புலவர்களால் அதற்குச் சரியான விளக்கம் தர முடியவில்லை. எனவே பெரியாரின் கருத்துக்கு நானும் அடிமைப்பட்டு பழந்தமிழ் இலக்கியங்களைக் ‘கறுப்பாகவே’ கருதி வெறுத்து வந்தேன்.

அதன்பின் இசை அறிவியல் கோணத்தில் பழந்தமிழ் இலக்கியங்களை நான் ஆராய்ந்தேன். பல அரிய இசையியல் தகவல்களை அவற்றில் நான் கண்டு பிடித்தேன். அவை எனது கணிணி இசை ஆய்வுக்குப் பெருந்துணை புரிந்ததோடு இசைத் தகவல் தொழில் நுட்பத்தைப் (Music Information Technology) பயன்படுத்தி உலக இசையை வளர்க்கவும் துணை புரிபவை ஆகும்.

தேவராம் தமிழிசைக்கு ஒரு அரிய சுரங்கமாகும். பெரிய புராணத்தில் உள்ள ஆனாயநாயனார் புராணம் குழலிசை பற்றிய அரிய தகவல்கள் கொண்ட இசைக் கருவூலம் ஆகும். சிலப்பதிகாரத்தில் வரும் இசை தொடர்பானச் சொற்களுக்கு வெளிச்சம் சங்க இலக்கியங்களில் இருப்பதை நான் பல ஆய்வுக் கட்டுரைகள் மூலம் நிறுவி உள்ளேன். சிலப்பதிகாரத்தை விட யாழிசை பற்றிக் கூடுதல் தகவல்கள் உள்ள நூல் பெருங்கதையாகும். திருக்குறளில் அரிய இசையியல் தகவல்கள் இருப்பதை நான் சங்க இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்துள்ளேன். கல்லாடம் அரிய இசையியல் தகவல்கள் கொண்ட நூலாகும்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுகளும் சிற்பங்களும் இசை நாட்டியம் பற்றிய கல்விக்கு ஓர் அரிய கருவூலமாகும். குடுமியான்மலைக் கோவிலும் அக்கோவிலையொட்டியுள்ள குடுமியான்மலை இசைக்கல்வெட்டும் உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

‘அடியோடு ஒழிக்க வேண்டியதே’ என்று பெரியாரால் கண்டிக்கப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் நான் கண்டுபிடித்த அரிய இசையியல் தகவல்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதைச் சுருக்கமாகக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

இசைத் தகவல் தொழில் நுட்பத்தைப் (Music Information Technology) பயன்படுத்தி நுண்ணொலி (Microsound) ஆய்வுகளின் அடிப்படையில் நவீன இசை ஆராய்ச்சிக்கு உதவும் ‘இசை இழை’ பற்றிய கண்டு பிடிப்பு (இது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை 2007 சனவரியில் அமெரிக்காவில் ஹவாயில் நடக்க உள்ள சர்வதேச மாநாட்டில் Hawaii International Conference on Arts and Humanities ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

உலகில் உள்ள எல்லா வகை இசைகளும் ஏற்று பயன்பெறக் கூடிய அளவுக்கு ஓர் அறிவுபூர்வமான தாள இசை இலக்கணம் (இது பற்றிய எனது ஆய்வுக் கட்டுரை 2006 சனவரியில் அமெரிக்கா ஹவாயில் நடந்த சர்வதேச மாநாட்டில் – Hawaii International Conference on Arts and Humanities – ஏற்றுக் கொள்ளப் பட்டது.

உலகில் உள்ள எல்லா மொழிகளும் ஏற்று பயன்பெறக் கூடிய அளவுக்கு எழுத்தின் ஒலிக்கும் இசைக்கும் இடையிலானத் தொடர்பு பற்றிய இலக்கணம்,
இசை அழகியல் சீர் குலைந்து தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் சமச்சுர அதிர்வெண் வேறுபாட்டுத் தகவு முறைக்குப் (Equal Temperament)  பதிலாக சிலப்பதிகாரத்தில் உள்ள சிறப்பான இசை அளவு முறை.

சுருதி சேர்ப்பதற்கு இன்றுள்ள சர்வதேச தர அதிர்வு எண் [International Pitch Standard] மதிப்புக்கு மிக நெருக்கமாகச் சிலப்பதிகார உரையில் வரும் ஒரு குழலின் இசை அறிவியல் அடிப்படையிலான அதிர்வெண் மதிப்பு.

சுருதி சுத்தமான (Accurate Pitch)  இசைப் பயிற்சிக்கு உதவும் ‘ந-ம-சி-வா-ய’ ஐந்தெழுத்து மந்திரத்தின் முக்கியத்துவம்.

மேற்சொன்ன ஆய்வு முடிவுகள் பற்றி ஆங்கிலத்தில் ‘Anicient Music Treasures – Exploration for New Music’ தொல் இசைப் புதையல்கள் – புதிய இசைக்கான தேடல் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளேன். இதில் சில முடிவுகள் இன்னும் தமிழில் கூட வெளிவரவில்லை. ஏன் என்பதை இக்கட்டுரையில் நான் விளக்க விரும்பவில்லை. மேற்கண்ட ஆய்வு முடிவுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ள அரிய இசையியல் தகவல்களின் துணையுடன் பெறப்பட்டவை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். எனக்கு சமஸ்கிருத மொழி தெரியாததால் சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத் தலைவர் பேரா. முனைவர். எஸ். தியாகராஜனும் சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் தலைவர் பேரா. முனைவர். என். ராமநாதனும் எனது இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.

பெரியார் இயக்கத்தால் ஏற்பட்ட இன்னொரு தவறான கருத்து சமஸ்கிருத மொழி மீது கொள்ளும் வெறுப்பு. பிராமணர்கள் மற்றும் வேதங்கள் தொடர்பானவைக்கான மொழியே சமஸ்கிருதம் என்பது தவறான கருத்து ஆகும். தொன்மை இந்தியாவில் வேதங்களுக்கு எதிராக, யாகங்களுக்கு எதிராக, இருந்த கருத்துகளை அறிவதற்கு உரிய மொழியாகவும் சமஸ்கிருதம் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், தொன்மை இந்திய அறிவுக் கருவூலங்களைக் கொண்ட மொழியாக சமஸ்கிருதம் இருக்கிறது. இன்றுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு சமூகத்தைச் சீர்திருத்தத் தேவைப்படும் கொள்கைகளை உருவாக்க உதவும் முக்கிய மூலங்களில் (Sources) சமஸ்கிருதத்திற்கு முக்கிய இடம் உண்டு. தமிழ் நாட்டில் உள்ள ‘முற்போக்காளர்’கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள முற்போக்கு நூல்களைப் போல் சமஸ்கிருதத்தில் உள்ள நூல்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் வடநாட்டில் தேபிப்ரசாத் சட்டோபாத்யாயா, கோசாம்பி, கே.சி.பட்டச்சார்யா, எஸ்.சட்டர்ஜி பாஸ்ம் எனப் பல அறிஞர்கள் சமஸ்கிருத நூல்களை ஆராய்ந்து அரிய தகவல்களை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்த வரிசையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. பெரியார் இயக்கத்தால் தமிழ்நாட்டில் தூண்டப்பட்ட சமஸ்கிருத வெறுப்பு வடநாட்டில் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகள் மீதுள்ள வெறுப்புக்கு வரலாற்று ரீதியிலான காரணங்கள் உண்டு.

ஆங்கிலேயர் வருகைக்கு முன் கடந்த சுமார் 700 ஆண்டுகளாக தமிழ் நாடு தமிழரல்லாத கன்னட, தெலுங்கு, மராத்திய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது இசையில் தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. வழிபாட்டில் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இன்று தமிழ்நாட்டில் இசையிலும் வழிபாட்டிலும் எந்த மொழித் திணிப்பையும் யாரும் ஆதரிக்கவில்லை. இசையிலும் வழிபாட்டிலும் தமிழ் தனக்கு உரிய இடத்தைப் பெறவில்லையென்றால் அதற்கு கடந்த 47 வருடங்களாகத் தமிழ்நாட்டை ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும்.

‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்குத் தமிழ்நாடு உள்ளானதும் இதற்குக் காரணமாகும். இந்நோய் காரணமாகத் தமிழ்நாட்டில் மோசமான புதிய சாதி முறை ஒன்று அரங்கேறி வருவதும் அதிர்ச்சியைத் தருகிறது.

1967-க்கு முன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர்களும் ‘காமராசர், பக்தவத்சலம், அண்ணாதுரை’ என்றே அவர்களின் பெயர்களால் அழைக்கப் பட்டார்கள். இன்றைக்குத் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரைச் சொன்னால் அவமரியாதை என்று கருதும் அளவுக்கு அடிமைக் கலாச்சாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் பிராமணர்களுக்கும் பண்ணையார்களுக்கும் கிராமத்தில் இருந்த மரியாதையை விடப் பயம் கலந்த கூடுதல் மரியாதை இது. மாநில அளவில் உள்ள பெரிய தலைவர்கள் பின்பற்றிய (நேரு குடும்ப) வாரிசு அரசியலை இப்போது மாவட்ட அளவில் உள்ள பெரிய தலைவர்களும் பின்பற்றத் தொடங்கி விட்டனர். தமிழ்நாட்டு அரசியலில் கடைபிடிக்கப்படுவது ஜனநாயக நெறிமுறையா அல்லது மன்னராட்சியின் வாரிசு அரசியலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலில் விழுவதிலும் பல மணி நேரம் (சில சமயம் பல நாட்கள்) காத்துக் கிடந்து (பெரும்பாலும் பிரயோசனமற்ற) தரிசனம் பெறுவதிலும் வாழ்வு நிலை, அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படைகளிலும் பெரியாருக்கு முன் இருந்த சாதி முறையை விட மோசமான புதிய சாதிமுறை அரங்கேறி வருகிறது.

தமது இயக்கத்தில் உள்ளவர்களைக் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு அடிமைப் படுத்தி வைப்பது தலைவர்களின் சுயநல வாழ்வுக்கு மிகவும் உதவும். குறிப்பாகத் தம் மீது அறிவுபூர்வமான விமர்சனங்களை முன் வைப்பவர்களைத் துரோகிகள் (கறுப்பு) என்று பட்டம் கட்டித் தமது தொண்டர்களைக் தூண்டி அவர்கள் மீது வன்முறையை ஏவ அத்தலைவர்களால் முடியும். அப்பாவித் தொண்டர்களும் தம்மைப் போராளியாகக் கற்பனை செய்து கொண்டு உண்மையில் அடியாளாகச் செயல்படுவார்கள். தமது தொண்டர்களை ‘அந்தத் துரோகிகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற ‘புதிய தீண்டாமை’க்குப் பழக்கப்படுத்தும் போக்கும் வளர்ந்து வருகிறது. தமிழக அரசியலில், பொதுவாழ்வில் ரவுடிகளும் ரவுடியிசமும் பெற்றுள்ள செல்வாக்கிற்கும் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோயின் செல்வாக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. இந்தத் தொடர்பின் தொகு விளைவாக விமர்சனங்கள் துரோகங்களாகச் சித்தரிக்கப்பட்டு எளிதில் சாகடிக்கப் படுகின்றன. ‘இந்தியாவின் முதல் சிம்பொனி’ பற்றிய விமர்சனங்கள் இவ்வாறு சாகடிக்கப்படுவதை நான் அனுபவித்து வருகிறேன்.

அரசியல் மட்டுமின்றி சமூகத்தின் எல்லாத் துறைகளிலும் இந்த நோய் உள்ளது. செல்வாக்கான நபர்கள் இசைத் துறையில் எவ்வளவு பெரிய தவறுகளைச் செய்தாலும் அவற்றிற்கு எவ்வளவு பெரிய பாராட்டுதல்களைப் பெற்றாலும் இப்போது உள்ள தமிழ்நாட்டுச் சூழலில் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே வாழ்வியல் புத்திசாலித்தனம் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்தேன். இக்கட்டுரை நான் எழுத அது துண்டுகோலாகவும் அமைந்தது.(2006 சனவரி 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது.)

சுயநலமில்லாமல் உண்மையில் சமூக முன்னேற்றத்திற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு உள்ளாகியிருப்பதால் அவர்களின் உழைப்பும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மேற்சொன்ன புதிய சாதிமுறை அரங்கேற்றத்திற்கேத் துணை புரிந்து வருகிறது. குறிப்பாகத் திறந்த மனதோடும் (Open minded)  அறிவு நாணயத்தோடும் தொடர்ந்து திறனாய்வு செய்யும் திறன் நம்மையறியாமலேயே நம்மை விட்டு விலக நேரிடுகிறது.

திறந்த மனதோடும் அறிவு நாணயத்தோடும் தாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கைகளை நிலைப்பாடுகளைப் பெரியாரைப் போல் தொடர்ந்து திறனாய்வு செய்யத் தவறினால் ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய்க்கு நாம் அடிமையாவதைத் தவிர்க்க முடியாது.

பெரியார் பிராமணர்கள் சங்கத்திலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் பெரியாரியல் நிபுணரும் பெரியார் இயக்கக் கூட்டத்தில் இந்துத்வா நிபுணரும் உரையாற்றும் வகையில் கருத்து வேறுபாட்டை மதித்துக் கூட்டம் நடத்தும் ஆரோக்கியமான சூழல் வர வேண்டும். ‘கருத்து கறுப்பு – வெள்ளை’ நோய் ஒழிய அது வழி வகுக்கும்.


2 comments: